புலிமேடு ஊராட்சி மலையடிவாரத்தில் படம் உள்ளது பேனர்.... (வேலூர்) குடிநீர் கிணறு பராமரிப்பின்றி தூர்ந்துபோன அவலம் அதிகாரிகள் நடவடிக்கைக்கு மக்கள் கோரிக்கை

அணைக்கட்டு, மார்ச் 8: புலிமேடு ஊராட்சி மலையடிவாரத்தில் ஆபத்தான நிலையில் உள்ள கிணற்றை சீரமைத்து குடிநீர் வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அணைக்கட்டு தாலுகா வேலூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஊசூர் அடுத்த புலிமேடு ஊராட்சியில் நூற்றுக்கணக்கான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் மலையடிவாரத்தை சுற்றி உள்ள பொதுமக்களின் தேவைக்காக கடந்த 2014-15ம் ஆண்டு ஊராட்சி உபரி நிதி திட்டத்தின் கீழ் மலையடிவாரத்தை ஒட்டியுள்ள வையாபுரி கொல்லைமேடு குட்டையில் ஒரு பெரிய கிணறு அமைக்கப்பட்டது.

அவ்வாறு அமைக்கப்பட்ட கிணறு பாதுகாப்பற்று ஆபத்தான நிலையில் உள்ளது. மேலும், பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய அதிகாரிகள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இதனால் மலையடிவார சுற்றுப்புற பகுதியில் வசிக்கும் மக்கள் போதுமான தண்ணீர் இன்றி சிரமப்பட்டு வருகின்றனர். மேலும், வையாபுரி கொல்லைமேடு குட்டையில் இருந்து தண்ணீர் வழங்க வேண்டும் என்று பலமுறை ஊராட்சி செயலர் மற்றும் பிடிஓக்களிடம் பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது கோடை வெயில் காலம் தொடங்கி உள்ளதால் அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட மாவட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு கிணற்றை சுற்றி சுற்றுச்சுவர் ஏற்படுத்தி அப்பகுதியில் குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: