×

பொன்ராஜ் வழக்கில் காவல்துறைக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு

சென்னை: அரசியல் விமர்சகர் பொன்ராஜூக்கு எதிராக பதியப்பட்ட வழக்குகளில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. பொன்ராஜ் வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யக்கூடாது என காவல் துறைக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

தவெக பெண் தொண்டர்களை இழிவாக பேசியதாக அரசியல் விமர்சகரும், மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் ஆலோசகருமான பொன்ராஜ் மீது கடந்த மார்ச் 26-ஆம் தேதி அமைச்சர் நிர்மல்குமார் மற்றும் ராஜ்குமார் புகார் அளித்தனர். இந்த புகாரின்பேரில் கடந்த மே 12-ஆம் தேதி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரும் கடலூர் போலீசாரும் பொன்ராஜ் மீது வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்குகளை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொன்ராஜ் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து, காவல் ஆணையருக்கு விளக்கம் அளித்து கடிதம் அனுப்பிவிட்டேன். சம்பந்தப்பட்ட பேட்டியில் இடம்பெற்ற அந்த குறிப்பிட்ட பகுதியும் யூடியூபில் இருந்து நீக்கப்பட்டுவிட்டது. 2 மாதங்களுக்குப் பிறகு, புகார்தாரர் அமைச்சராக பதவி ஏற்ற பின்னர் அரசியல் உள்நோக்கத்துடன் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. நேர்காணல் நடத்தியவர் எழுப்பிய கேள்விக்கு மட்டுமே நான் பதில் அளித்தேன். பெண்களுக்கு எதிராக எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.

எனது பேட்டியின் ஒரு பகுதியை தவறாக திரித்து என் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் தவெகவினர் எனக்கு மிரட்டல் விடுத்தது குறித்து நான் அளித்த புகார் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, என் மீதான வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் எனக் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு வரும் 29-ம் தேதிக்குள் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார், மற்றும் கடலூர் போலீஸார் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார். அதுவரை, இந்த வழக்குகளில் போலீசார் இறுதி அறிக்கை தாக்கல் செய்யக் கூடாது என நீதிபதி உத்தரவிட்டார்.

Tags : High Court ,Ponraj ,Chennai ,Chennai High Court ,Thaveka ,
× RELATED தமிழக தீயணைப்புத்துறை ஆணையத் தலைவர்...