சட்டமன்ற தேர்தல் நேரத்திலும் ஆள் பற்றாக்குறை 2 போலீசாருடன் செயல்படும் காயார் காவல் நிலையம்: வழக்குகள் விசாரிப்பதிலும் தாமதம்

திருப்போரூர்: சட்டமன்ற நேரத்திலும் ஆள் பற்றாக்குறையுடன், 2 போலீசாருடன் காயார் காவல் நிலையம் செயல்படுகிறது. இதனால், பாதுகாப்பு பணிகள் மட்டுமின்றி வழக்குகள் விசாரிப்பதில் தாமதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. திருப்போரூர் இன்ஸ்பெக்டர் கட்டுப்பாட்டில் திருப்போரூர், மானாம்பதி, காயார் ஆகிய காவல் நிலையங்கள் உள்ளன. இதில் காயார் கிராமத்தில் உள்ள சமுதாயக்கூடம் ஒன்றில் காயார் காவல் நிலையம் கடந்த 2015ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் ஒரு எஸ்.ஐ., 2 எஸ்எஸ்ஐ, 7 காவலர்கள் நியமிக்கப்பட்டனர். 20 பணியிடங்கள் இருந்தாலும் 10 பேர் ஓரளவுக்கு காவல் நிலையத்தை பராமரித்து வந்தனர்.

இதுவரை இந்த காவல் நிலையம் தற்காலிகமாகவே இயங்குகிறது. பலரும் பணியிட மாற்றம் கேட்டு சென்று விட்டதால், இந்த காவல் நிலையத்தில் தற்சமயம் சுசீலா என்ற ஒருபெண் எஸ்ஐ மட்டும் உள்ளார். அவருடன் தற்போது 2 ஆயுதப்படை போலீசார் பணியாற்றுகின்றனர். இந்த காவல் நிலையத்தின் கீழ் 12 கிராமங்கள் உள்ளன. ஒவ்வொரு கிராமமும் நீண்ட தூரம் உள்ளதால் முக்கிய குற்றசம்பவங்கள் நடக்கும்போது, போலீசார் செல்ல முடியாத நிலை உள்ளது. மேலும், பொது மக்களின் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், அப்படியே நிலுவையில் உள்ளன.

முக்கிய புகார்கள் வந்தால், அதனை திருப்போரூரில் உள்ள இன்ஸ்பெக்டரிடம் சென்று கொடுக்கும்படி காவல் நிலையத்தில் சொல்வதால், பொதுமக்கள் திருப்போரூர் செல்கின்றனர். இதனால், காயார் கிராமத்தில் காவல் நிலையம் உருவாக்கப்பட்டும் பொது மக்களுக்கு பயன் இல்லாத நிலையே உள்ளது. போதிய போலீசார் இல்லாததால் இரவு ரோந்து பணி, ஏடிஎம் கண்காணிப்பு ஆகியவற்றை செயல்படுத்த முடியாத நிலை உள்ளது. கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காயார் கிராமத்தில் அடுத்தடுத்து 2 வீடுகளில் 100 சவரன் கொள்ளை அடிக்கப்பட்ட வழக்கில், இதுவரை மர்மநபர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. கடந்த 6 மாதங்களில் மட்டும் 4 கொலைகள், இக்காவல் நிலைய எல்லையில் நடந்துள்ளன.

தற்போது பணியில் இருக்கும் ஆயுதப்படை போலீசாரும் 24 மணி நேரத்துக்கு மேலாக பணியில் இருக்க வேண்டும் என கட்டாயப்படுத்துவதாக தெரிகிறது. போதிய போலீசார் இல்லாத நிலையில், நீதிமன்ற பணி, டிஎஸ்பி அலுவலக பணி, எஸ்பி அலுவலக பணி ஆகியவற்றை தற்போதுள்ள 2 போலீசாரே மேற்கொள்ள வேண்டியுள்ளது. மேலும் 24 மணி நேரமும் மைக் கண்காணிப்பு பணியும் உள்ளதால், அதிக பணிச்சுமை, போதிய தூக்கமின்மை, குடும்பத்தினரை பிரிந்து இருந்தல் உள்ளிட்ட காரணங்களால் செய்யும் வேலையையும் ஒழுங்காக செய்ய முடியாமல் போலீசார், மன உளைச்சர் அடைகின்றனர்.

இந்தவேளையில், வரும் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், கிராமத்தில் பணப்பட்டுவாடா, இலவச பொருட்கள், பரிசு பொருட்கள் வழங்குவதை கண்காணிக்கவும், தடுக்கவும் செல்ல முடியாத நிலை உள்ளது. மேலும், சில வழக்குகளுக்கு, பொதுமக்கள் புகார் அளிக்க வந்தால், போலீசார் வரும்வரை காத்திருக்கும் நிலையும் ஏற்படுகிறது. பறக்கும்படையினருடன், பாதுகாப்பு பணியில் ஈடுபடவும் போலீசாரால் முடியாமல் போகிறது. இதுபோன்ற சிரமங்களை போக்க, காயார் காவல் நிலையத்தில் ஒரு எஸ்ஐ, 2 எஸ்எஸ்ஐ, 10 போலீசாரை நியமிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும்,பொதுமக்களும் வலியுறுத்துகின்றனர்.

Related Stories:

>