காஞ்சிபுரம் மாவட்டத்தின் 3 இடங்களில் ஆவணமின்றி எடுத்து வந்த ரூ.4.22 லட்சம் பறிமுதல்

ஸ்ரீபெரும்புதூர்: தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ளது. இதனால் தேர்தல் பறக்கும் படையினர் ஆங்காங்கே வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சோமங்கலம் காவல் நிலைய கட்டுப்பாட்டில் உள்ள வரதராஜபுரம் 400 அடி வெளிவட்ட சாலையில், ஸ்ரீபெரும்புதூர்  சிறப்பு தாசில்தார் கல்யாணசுந்தரம் தலைமையில் போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த காரை மடக்கி சோதனை செய்தபோது, அதில் ஆவணங்களின்றி ரூ.1.22 லட்சம் இருப்பது தெரிந்தது. இதுபற்றி விசாரித்ததில் பணத்தை எடுத்து வந்தவர் திருவள்ளூர், காமாட்சியம்மன் கோயில் தெருவை சேர்ந்த சரத்பாபு (36) என தெரிந்தது. இதையடுத்து போலீசார், பணத்தை பறிமுதல் செய்தனர்.

ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரம் அடுத்த சோகண்டி சோதனைச்சாவடியில், சிறப்பு தாசில்தார் மலர்விழி தலைமையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது திருவள்ளூர் மாவட்டம், பன்னூர் கிராமம், அந்தோணியார் தெரு ராபர்ட் (52), என்பவர் காரில் அவ்வழியாக வந்தார். அந்த காரை சோதித்ததில், ஆவணங்கள் இன்றி ரூ.69 ஆயிரம் இருந்தது. இதையடுத்து அந்த பணத்தை பறிமுதல் செய்தனர். காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட எல்லையான படுநெல்லி பகுதியில் தேர்தல் பறக்கும்படை தாசில்தார் அகிலா தலைமையில் போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது, அரக்கோணத்தில் இருந்து காஞ்சிபுரம் நோக்கி பைக்கில் வந்த 2 பேரை மடக்கி சிறப்பு உதவி ஆய்வாளர் மகேந்திரன் உள்ளிட்ட போலீசார் சோதனை நடத்தினர். அதில், பைக்கில் வந்த சம்பத், ஜெயக்குமார் ஆகியோர் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.2.31 லட்சம் வைத்திருந்தது தெரியந்தது. இதையடுத்து அந்த பணத்தை பறிமுதல் செய்தனர்.

Related Stories: