திருச்செங்கோட்டில் வருமான வரித்துறை சார்பில் கருத்தரங்கு

திருச்செங்கோடு, மார்ச் 8: திருச்செங்கோடு வருமான வரித்துறை அலுவலகத்தில், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விவாட் சீ விஸ்வாஸ் திட்டம் பற்றிய கருத்தரங்கு நடந்தது. சீனியர் ஆடிட்டர் கோவிந்தராஜன் தலைமை வகித்தார். வருமான வரித்துறை அலுவலர் ஜெயராமன் வரவேற்றார். அலுவலர்  கமலக்கண்ணன், இந்த திட்டத்தின் நோக்கம் குறித்து ஆடிட்டர்கள் மற்றும் வருமான வரி செலுத்துவோரிடமும் விளக்கினார். மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட இத்திட்டத்தின் முக்கிய நோக்கம், நீண்ட காலமாக வருமான வரித்துறையிலும், நீதிமன்றங்களிலும் உள்ள  மேல்முறையீடு வழக்குகளை குறைத்து, வருமானத்தை அதிகப்படுத்துவது ஆகும்.  

இதன் மூலம், இந்தியா முழுவதும் தேங்கியுள்ள மேல்முறையீட்டு வழக்குகள், கணிசமாக குறையும் வாய்ப்பு உள்ளது. இந்த திட்டத்தை பயன்படுத்திக்கொள்ள வரும் 31ம் தேதி வரை கால அவகாசம் உள்ளது. ஆன்லைன் மூலமே இதற்கு  விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

சிறப்பு நீதிமன்றங்களில் உள்ள வழக்கு சம்பந்தமான வருமானம், வெளிநாட்டில் இருந்து வரும் வருமானம், காபிபோசா சட்டத்தில் உள்ள வருமானம், சட்டப்பூர்வமற்ற  வழியில் வந்த வருமானம்  போன்றவை, இந்த திட்டத்தில் சேராது என்று தெரிவிக்கப்பட்டது. கருத்தரங்கில்  வருமான வரித்துறை ஆய்வாளர் ரஷீத்,  ஆடிட்டர்கள் சங்க உறுப்பினர்கள், திருச்செங்கோடு, பள்ளிபாளையம், குமாரபாளையம் ஆடிட்டர்கள், வருமான வரி செலுத்துவோர் கலந்து கொண்டனர்.   ஆய்வாளர் பொன்னையா நன்றி கூறினார்.

Related Stories:

>