புதுச்சத்திரம் சம்பவத்தில் திடீர் திருப்பம் ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளி போலீஸ் இன்பார்மர் கொலையா?

சேந்தமங்கலம், மார்ச் 8:  புதுச்சத்திரம் அருகே நள்ளிரவு எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்து இறந்த வாலிபர், போலீஸ் இன்பார்மர் என்பது தெரியவந்துள்ளது. அவரை யாரேனும் கீழே தள்ளி  விட்டு கொலை செய்தனரா என்ற கோணத்தில் கேரள மாநில போலீசார் விசாரிக்கின்றனர். கேரள மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்த செல்வக்குமார்(45). இவர்  கடந்த 5ம் தேதி இரவு, கேரளாவில் இருந்து பழனி வழியாக சென்னைக்கு, எக்ஸ்பிரஸ் ரயிலில்  குளிர்சாதன பெட்டியில் பயணம் செய்தார். நள்ளிரவில், நாமக்கல் அடுத்த  புதுச்சத்திரம் கண்ணூர்பட்டியில் ரயில் சென்ற  போது, செல்வக்குமார் கழிப்பறை கதவை திறப்பதற்கு பதிலாக, ரயில் பெட்டியின் கதவை திறந்த போது, ஓடும் ரயிலில் இருந்து  தவறி கீழே விழுந்து உயிரிழந்தார்.

இதுகுறித்த தகவலறிந்த சேலம் ரயில்வே போலீசார், செல்வக்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதில் செல்வகுமார் கேரளா மாநிலம் பாலக்காடு போலீசாரின் இன்பார்மர் என்பது தெரியவந்துள்ளது. ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளி, செல்வகுமார் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என அவரது உறவினர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதுகுறித்து அவர்கள் கேரள போலீசில் புகார் தெரிவித்தனர். இதையடுத்து கேரள போலீசார், சம்பவம் நடந்த இடமான கண்ணூர்பட்டிக்கு வந்து, சம்பவத்தன்று பணியில் இருந்த கேட் கீப்பர் மற்றும் சேலம் ரயில்வே போலீசாரிடம் தகவல் சேகரித்து வருகின்றனர். போலீஸ் இன்பார்மராக இருந்ததால், செல்வக்குமாரால் பாதிக்கப்பட்டவர்கள் யாரேனும், அவரை ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளி கொலை செய்தனரா என்ற கோணத்தில், போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: