தீ விபத்தில் வீடு எரிந்து நாசம்

திண்டிவனம், மார்ச் 8: திண்டிவனம் அடுத்த பட்டணம் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன்(55), விவசாயி. இவர் நேற்று மதியம் கூரை வீட்டில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டின் மேலே சென்ற உயர்மின்னழுத்த கம்பி மரத்தில் உரசியது. இதில் தீப்பொறி பறந்து வீட்டின் கூரை மீது விழுந்து தீப்பற்றி எரிந்தது.அப்போது வீட்டிற்குள் உறங்கிக் கொண்டிருந்த கோவிந்தன் மீது அனல் பட்டதும், அலறியடித்துக் கொண்டு வெளியே வந்து கூச்சலிட்டார். பின்னர் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர்.ஆனால் காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீ மளமளவென வீடு முழுவதும் பரவி கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது. பின்னர் இதுகுறித்து திண்டிவனம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த சந்தானகுமார் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இத்தீவிபத்தில் வீட்டு உபயோகப் பொருட்கள் எரிந்து நாசமானது.

Related Stories:

>