விஜய்யின் வாகனம் மோதி வாலிபரின் கால் முறிவு ரூ.50 ஆயிரம் வாங்கிக்கொண்டு புகாரை திரும்பப் பெறுமாறு போலீசார் மிரட்டல்: தலைமைச்செயலகம் முன் தீக்குளிப்போம் என தந்தை பேட்டி

சென்னை: முதல்வர் விஜய்யின் வாகனம் மோதி கால் முறிவு ஏற்பட்டு வாலிபர் படுகாயமடைந்த நிலையில், ரூ.50 ஆயிரம் வாங்கிக் கொண்டு புகாரை திரும்பப் பெறுமாறு போலீசார் மிரட்டும் நிலையில் தலைமைச்செயலகம் முன்பாக மகனுடன் தீக்குளித்து தற்கொலை செய்துகொள்வோம் என்று பாதிக்கப்பட்ட நபரின் தந்தை மனவேதனை தெரிவித்தார்.

செங்குன்றம் அடுத்த அலமாதி கிராமத்தை சேர்ந்தவர் பிரான்சிஸ் (25), ஆட்டோ டிரைவர். இவர் திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு வயது குழந்தையுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலையொட்டி கடந்த ஏப்ரல் 20ம் தேதி மாதவரம் சட்டமன்ற தொகுதியில் பிரசாரம் மேற்கொள்ள தவெக தலைவர் விஜய் செங்குன்றம் அம்பேத்கர் நகர் மேம்பாலம் மீது வாகனத்தில் சென்றார். அப்போது பிரான்சிஸ் மீது விஜய்யின் பாதுகாவலர்கள் சென்ற கார் வேகமாக மோதியதில் நிலை தடுமாறி கீழே விழுந்தார். அப்போது, விஜய்யின் பிரசார வாகனம் பிரான்சிஸ் கால் மீது வேகமாக ஏறி இறங்கியது. இதில், கால் முறிவு ஏற்பட்டு பலத்த காயமடைந்த பிரான்சிஸ்சை பொதுமக்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து சோழவரம் காவல் நிலையத்தில் ஏப்ரல் 21ம் தேதி புகார் அளித்தார். அப்போது, தேர்தல் நேரம் என்பதால் இரண்டு நாட்கள் கழித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்வதாக போலீசார் தெரிவித்தனர். ஆனால், தற்போது வரை விசாரணை மேற்கொள்ளாமலும் வழக்கு பதிவு செய்யாமலும் இருப்பது குறித்து பிரான்சிஸ் மற்றும் அவரது தந்தை காவல் நிலையம் சென்று கேட்டனர். தேர்தலில் ஜோசப் விஜய் வெற்றி பெற்று முதல்வராகிவிட்டார். அதனால் அவர் மீது வழக்கு பதிவு செய்ய முடியாது, என்று போலீசார் கூறியுள்ளனர்.
இதுதொடர்பாக, ஸ்டான்லி மருத்துவமனையில் செய்தியாளரிடம் பேசிய பிரான்சிஸ், தான் விஜய் ரசிகர் என்பதால் தேர்தல் பிரசாரத்திற்காக சென்றேன். விஜய்யை பார்க்க போனபோது அவரது வாகனத்தில் சிக்கி படுகாயம் அடைந்து கால் முறிவு ஏற்பட்டது. இதை பார்த்த விஜய் எதுவுமே சொல்லவில்லை. இதுகுறித்து புகார் அளித்தும் இதுவரை போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, என்றார்.

மேலும் பாதிக்கப்பட்ட பிரான்சிஸ்சின் தந்தை பேசுகையில், 15 முறை காவல் நிலையத்திற்கு சென்று விட்டேன். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. எனது மகனுக்கு இதுவரை இரண்டு லட்சம் ரூபாய் வரை மருத்துவ செலவு செய்துள்ளோம். தவெக கட்சியில் 50 ஆயிரம் ரூபாய் தருகிறோம். வழக்கு எதுவும் போட வேண்டாம் என்று சொல்கின்றனர். இதனால் தங்களுக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. தலைமைச் செயலகம் முன்பு நானும், எனது மகனும் மண்ணெண்ணை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொள்கிறோம். ரூ.30 ஆயிரம் தருகிறோம் என்று போலீசார் கூறுகின்றனர். விஜய் வந்தால் நல்லது நடக்கும் என்று நினைத்தோம். ஆனால் என்ன பண்ண போகிறார் என்று தெரியவில்லை என வேதனையுடன் கூறினார்.

பாதிக்கப்பட்டவரின் வழக்கறிஞர் பேசுகையில், ‘‘காவல் நிலையத்தில் புகார் அளித்த போது தேர்தல் நடைபெற உள்ளதால் 2 நாட்கள் கழித்து விசாரிக்கிறோம் என்று கூறிய நிலையில் தேர்தலில் விஜய் வெற்றி பெற்றவுடன் முதல்வர் மற்றும் அவரது வாகனம் மீது வழக்கு பதிவு செய்ய முடியாது சமாதானமாக போக வேண்டும், என்று போலீசார் கூறுகின்றனர். பாதிக்கப்பட்ட நபரின் தந்தையை அழைத்து ரூ.50 ஆயிரம் தருகிறோம், முதல்வரின் வாகனம் மீது வழக்கு பதிவு செய்ய முடியாது, என்று போலீசார் மிரட்டுகின்றனர். வழக்கு பதிவு செய்தால் வாகனத்தின் காப்பீட்டில் இருந்து பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்கப்படும்.

ஏழைகளுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிறார்கள். எனவே விஜய் வாகனத்தின் மீது போலீசார் வழக்கு பதிவு செய்வதற்காக நீதிமன்றத்தில் வழக்கு தொடர போகிறோம். காவல்துறை மற்றும் தவெக கட்சியினர் மிரட்டுகின்றனர்’ என்றார்.

Related Stories: