விருத்தாசலத்தில் ஆம்புலன்ஸ் டிரைவரை கத்தியால் குத்திய கணவன், மனைவி மீது வழக்கு

விருத்தாசலம், மார்ச் 8: விருத்தாசலம் பூந்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் வேலாயுதம் மகன் பாரதி(26). இவர் விருத்தாசலம் அரசு மருத்துவமனை பகுதியில் தனியார் ஆம்புலன்ஸ் வேன் ஓட்டி வருகிறார். கார்குடல் கிராமத்தை சேர்ந்த தவமணி மகன் சிலம்பரசன் என்பவருக்கும், இவருக்கும் தொழில் சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளதாக தெரிகிறது. இந்நிலையில், சம்பவத்தன்று இரவு ஆம்புலன்சில் நோயாளியை ஏற்றிக்கொண்டு பாரதி வெளியூர் சென்றுவிட்டு திரும்ப வந்து ஆம்புலன்சை நிறுத்தி விட்டு அதிலேயே படுத்து உறங்கிக்கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த சிலம்பரசன், பாரதி படுத்திருந்த ஆம்புலன்சின் கண்ணாடியை உடைத்து உள்ளே இருந்தவரை வெளியே இழுத்து தகராறு செய்துள்ளார். தொடர்ந்து கையில் வைத்திருந்த கத்தியால் பாரதியின் உடலில் பல இடங்களில் குத்தியும், கீறியும் ரத்தக்காயம் ஏற்படுத்தி உள்ளார்.

மேலும் அவரது மனைவி கவிதா, கையில் வைத்திருந்த கம்பியால் பாரதியை சரமாரியாக தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதில் பலத்த காயமடைந்த பாரதி விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இது குறித்து பாரதி கொடுத்த புகாரின் பேரில் சிலம்பரசன் மற்றும் அவரது மனைவி கவிதா ஆகிய இருவர் மீதும் விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>