பெரியார் பிறந்த நாளான செப். 17ம் தேதி முதல் திமுக கொண்டு வந்த காலை உணவு திட்டம் 6 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கும் விரிவாக்கம்: முதல்வர் அறிவிப்பு

சென்னை: பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17ம் தேதி முதல் திமுக அரசு கொண்டு வந்த 6 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கும் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என்று முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.

முதல்வர் விஜய் தலைமையில் நேற்று தலைமைச் செயலகத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் சமூக நலத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை ஆகிய துறைகளின் மூலம் குழந்தைகள், பெண்கள், திருநங்கைகள் மற்றும் மூத்த குடிமக்கள் ஆகியோரது நலனிற்காக செயல்படுத்தப்பட்டு வரும் இல்லங்கள், பல்வேறு திட்டங்கள், சமூக சட்டங்கள், சத்துணவு மையங்கள் மற்றும் குழந்தைகள் மையங்கள் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

‘வெற்றித் தமிழகம்’ தொலைநோக்கு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள துறை சார்பாக செயல்படுத்தக்கூடிய திட்டங்கள், அதற்கு தேவைப்படும் நிதி ஒதுக்கீடுகள் குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டது. மேலும், பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மைய செயல்பாடுகள், தத்தெடுக்கும் மையங்கள், மகளிர், குழந்தைகள், மூத்த குடிமக்கள் ஆகியோருக்காக செயல்படுத்தப்படும் உதவி எண்கள், குழந்தைகளுக்கான காலை மற்றும் மதிய உணவுத் திட்டம், அங்கன்வாடி மையச் செயல்பாடுகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களை, தொடர்புடைய பயனாளர்களான குழந்தைகள், பெண்கள், திருநங்கைகள் மற்றும் மூத்த குடிமக்களிடம் தடையின்றி மற்றும் துரிதமாக கொண்டு சேர்க்க வேண்டும் எனவும், குழந்தைகள் பாதுகாப்பு குறித்தும், போதைப்பொருள் பழக்கத்திற்கு உள்ளாகாதபடி அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடவும், போதை பழக்கத்திற்கு ஆளான குழந்தைகளை மீட்டு அவர்களுக்கு உரிய மறுவாழ்வு அளித்திட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முதல்வர் விஜய் அறிவுறுத்தினார்.

‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை’ 6 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விரிவாக்கம் செய்திட ஏதுவாக, பெரியார் பிறந்தநாளான செப்டம்பர் 17ம் தேதி இத்திட்டத்தினை முதற்கட்டமாக தொடங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். இந்த ஆய்வு கூட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி, தலைமைச் செயலாளர் சாய்குமார், நிதித்துறை செயலாளர் எம்.ஏ.சித்திக், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை செயலாளர் பல்லவி பல்தேவ், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை இயக்குநர் (முழு கூடுதல் பொறுப்பு) ஷில்பா பிரபாகர் சதீஷ், சமூகநலத்துறை இயக்குநர் மகேஸ்வரி ரவிக்குமார், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை கூடுதல் செயலாளர் வளர்மதி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் இயக்குநர் மற்றும் குழும இயக்குநர் மெர்சி ரம்யா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளின் படிப்பினை ஊக்குவிக்கவும், ஊட்டச்சத்து குறைபாட்டினை போக்கவும், கற்றல் இடைநிற்றலை தவிர்க்கவும் கடந்த திமுக ஆட்சியில் அப்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்த திட்டம்தான் ‘முதலமைச்சரின் காலை உணவு திட்டம்’ ஆகும். அதன்படி 1,545 அரசு பள்ளிகள் மற்றும் 3,995 அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் காலை உணவு திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இதன்மூலம் 18.50 லட்சம் மாணவர்கள் பயனடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories: