கண்மாய் நீர்வரத்து ஓடையானது சுத்தகங்கை ஓடை விளைநிலங்களுக்கு போக்குவரத்து வசதியின்றி விவசாயிகள் அவதி பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுக்க கோரிக்கை

தேவாரம், மார்ச் 8: தேவாரம் அருகே, சுத்தகங்கை ஓடை கண்மாய் நீர்வரத்து பாதையானதால், விளைநிலங்களுக்கு செல்ல பாதை இல்லாமல் விவசாயிகள் அவதிப்படுகின்றனர். எனவே, சுத்தகங்கை ஓடையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, பாதை வசதி ஏற்படுத்த பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். தேவாரம் அருகே, டி.ரெங்கநாதபுரம் ஊராட்சியில் சுத்தகங்கை ஓடை உள்ளது. இந்த ஓடையின் இருபுறமும் நூற்றுக்கணக்கான ஏக்கரில் விளைநிலங்கள் உள்ளன. இந்த நிலங்களுக்கு விளைபொருட்கள், டிராக்டர் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல, சுத்தகங்கை ஓடையை விவசாயிகள் பயன்படுத்தி வந்தனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு 18ம் கால்வாய் திட்டம் செயல்படுத்தப்போது 18ம் கால்வாயில் இருந்து சின்னதேவி கண்மாய்க்கு தண்ணீரை சுத்தகங்கை ஓடை வழியாக கொண்டு சென்றனர்.

இதனால், விவசாயிகள் தங்களது நிலங்களுக்கு ஓடை வழியாக செல்ல முடியாமல், தனியார் நிலங்கள் வழியாக சென்று வந்தனர். தற்போது சாலையை ஒட்டியுள்ள விவசாய நிலங்கள் விலை உயர்ந்து வருவதால், தனியார்கள் தங்களது நிலங்கள் வழியாக செல்வதை தடுத்து மறைத்துள்ளனர். இதனால், விவசாயிகள் தங்களது நிலங்களுக்கு செல்ல முடியாமலும், விளைபொருட்களை அறுவடை செய்ய முடியாமல் அவதியடைந்து வருகின்றனர். இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ‘சுத்தகங்கை ஓடை வழியாகதான் விவசாய நிலங்களுக்கு சென்று வந்தோம். தற்போது 18ம் கால்வாய் திட்டத்திற்கு பிறகு ஓடை வழியாக செல்லாமல் தனியார் நிலங்கள் வழியாக சென்று வந்தோம்.

இந்நிலையில், தனியார் சிலர் தங்களது நிலத்தில் உள்ள பாதையை மறைத்து கொண்டனர். இதனால் விவசாய நிலங்களுக்கு செல்ல பாதை இல்லை. எனவே, சுத்தகங்கை ஓடையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி விவசாய நிலங்களுக்கு செல்லும் வகையில் வண்டிப்பாதை அமைத்து தர பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: