மக்களை தெருநாய்களுடன் ஒப்பிட்டு பேசுவதா..? ராகவா லாரன்ஸுக்கு வலுக்கும் கண்டனங்கள்

சென்னை: நடிகர் ராகவா லாரன்ஸ், நேற்று தனது வீட்டில் நிருபர்களை சந்தித்து, அரசியல் பிரவேசம் குறித்த முடிவை விரைவில் அறிவிப்பேன் என்று சொன்னார்.

இதுகுறித்து ராகவா லாரன்ஸ் கூறுகையில்,
‘நீங்கள் எதிர்பார்த்த ஒரு நல்ல முடிவை, விரைவில் எனது தாயார் முன்னிலையில் அறிவிப்பேன். என்னை பொறுத்தவரையில், தவெக அரசின் ஆட்சி சிறப்பாகத்தான் இருக்கிறது. புதிய அரசு என்பதால், அவர்களுக்கு கால அவகாசம் தேவைப்படுகிறது. உதாரணமாக, நாம் புது ஏரியாவில் வாடகை வீட்டுக்கு சென்றால், அந்த வீடு வெளியில் இருந்து பார்ப்பதற்கு நன்றாக இருக்கும். வீட்டுக்குள் சென்றால்தான் அங்கு என்னென்ன பிரச்னைகள் இருக்கிறது என்பது தெரியும். அங்கிருக்கும் தெருநாய்கள் கூட நம்மை பார்த்து குரைக்கும். அப்போது அதற்கு பிடித்த பிஸ்கட்டை போட வேண்டும். சில தெருநாய்கள் பிரியாணிதான் சாப்பிடும். அப்போது அதற்கு பிடித்த உணவை கொடுத்து அதை பார்த்துக்கொள்ள வேண்டும். ஒரு வீடு, ஒரு நாய்க்கே இப்படி என்றால், ஒரு நாட்டையும், மாநிலத்தையும் பார்ப்பவர்களுக்கு கால அவகாசம் வேண்டும். எதிர்கட்சிகள் விமர்சனங்களை வைப்பது பொறாமையால்தான். தவெகவை விமர்சிப்பதற்கு முன்னால், நாம் என்ன செய்தோம் என்பதை யோசிக்க வேண்டும்’ என்று சொன்னார்.

ராகவா லாரன்ஸின் இந்த பேச்சு பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர் யாரை தெருநாயுடன் ஒப்பிட்டு பேசுகிறார்? மக்களையும், அரசின் செயல்பாடுகளை விமர்சிப்பவர்களையும் தெருநாய்களுடன் ஒப்பிடுவதா என்று, பல்வேறு தரப்பினர் அவருக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தனது பேச்சுக்கு கடும் எதிர்ப்புக் கிளம்பிய நிலையில் நேற்றிரவு சமூக வலைத்தளத்தில் ராகவா லாரன்ஸ் விளக்கம் அளித்தார். ‘நான் எப்போதும் எனது ரசிகர்களையும், பொதுமக்களையும் எனது தாய்க்கு நிகராக மதிக்கிறேன். ஆனால், நான் மக்களை தெருநாய்களுடன் ஒப்பிட்டு பேசியதாக தவறாக பரப்பப்படுகிறது. இது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது, தவறாக புரிந்துகொள்ளப்பட்டவை’ என கூறியுள்ளார்.

Related Stories: