திருட்டு, வழிப்பறியை தடுக்க தெருவிளக்கு அமைக்க கோரிக்கை

அவிநாசி, மார்ச் 8: தொடர் திருட்டு, வழிப்பறியை தடுக்க,பழங்கரை ஊராட்சியில்  தெருவிளக்குகளை அமைத்து தர வேண்டும் என்று பழங்கரை ஊராட்சி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அவிநாசி ஒன்றியம் பழங்கரை ஊராட்சியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர். அவிநாசி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து, அவிநாசி அரசு கலைக்கல்லூரி, சந்தைப்பேட்டை வழியாக பழங்கரை பஸ் ஸ்டாப் வரை செல்வதற்கு, யுவராஜ் அவின்யூ குடியிருப்புகள் வரை செல்வதற்கும்  ஒரே ஒரு அரசுடவுன் பஸ்சும், ஒரே ஒரு மினிபஸ் தான் உள்ளது. இதனால் இந்த கிராம மக்கள் நகரத்திற்கு சென்று வர முடியவில்லை. இந்த கிராமத்திற்கு ஷேர் ஆட்டோக்களும் அதிகளவில் இல்லை.

இந்த பகுதிகளில் இருந்து பெண்களும், மாணவர்கள், முதியோர்கள் பனியன் தொழிலாளர்கள், வெளி ஊர்களுக்கு சென்று வர இயலாமல் மிகவும் அவதிபட்டு வருகின்றனர். எனவே இந்த கிராமத்திற்கு கூடுதலாக டவுன் பஸ்களையும், மினிபஸ்களையும் இயக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இந்த பகுதியில் தெருவிளக்குகள் இல்லாததால், இரவு நேரங்களில் பெண்கள் தனியாக சென்று வர இயலாமல் உள்ளது. வட மாநிலத்தவர்கள் இந்த பகுதியில் அதிகளவில் குடிபெயர்ந்துள்ளனர். இந்த நிலையில் இந்த பகுதியில் இரவு நேரத்தில் தனியாக செல்லும் பெண்களிடம் திருட்டு, வழிப்பறி நடைபெற்று வருகின்றது. எனவே, வழிப்பறியை தடுக்க தெருவிளக்குகளை அமைத்து தர வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: