தென்னம்பாளையம் மார்க்கெட்டில் மேற்கூரை இன்றி வியாபாரிகள் அவதி

திருப்பூர், மார்ச் 8: திருப்பூர், தென்னம்பாளையம் மார்க்கெட்டில் மேற்கூரை இல்லாததால் வியாபாரிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். திருப்பூர் பல்லடம் ரோட்டில் உள்ள தென்னம்பாளையத்தில் காய்கறி மொத்த விற்பனை மார்க்கெட், சில்லரை விற்பனை மார்க்கெட் ஆகியவை ஒருங்கே செயல்பட்டு வருகின்றன. இந்த மார்க்கெட்டுக்கு தினமும் ஏராளமான விவசாயிகள் தங்கள் காய்கறிகள், பழங்கள் போன்ற விளை பொருட்களை எடுத்து வந்து விற்பனை செய்கிறார்கள். அதுபோல், நூற்றுக்கணக்கான வியாபாரிகளும் வெளியூரில் இருந்து விளை பொருட்களை வாங்கி மொத்தமாக விற்பனை செய்து வருகிறார்கள்.

மொத்த விற்பனை மார்க்கெட்டில் மட்டும் தினமும் 5 டன் எடையுள்ள காய்கறிகள், கீரைகள், பழங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. ஆனால் இந்த மார்க்கெட்டில் விவசாயிகளுக்கும், வியாபாரிகளுக்கும் எந்த வித வசதியும் செய்து கொடுக்கவில்லை. தற்போது, அதேபகுதியில் புதிய மார்க்கெட்டிற்கான கட்டுமான பணிகளும் மிகவும் மந்தகதியில் பல காலமாக நடந்து வருகிறது. மேலும், மார்க்கெட் பகுதி முழுவதும் சிமெண்டு தளம் அமைக்காததால், தக்காளி, வெங்காயம் போன்றவற்றை தரையில் வைத்து வியாபாரிகள் விற்பனை செய்து வருகிறார்கள்.ஆனால் மார்க்கெட் முழுவதும் மேற்கூரை வசதி இல்லாததால், விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கடும் வெயிலால் அவதிப்பட்டு வருகிறார்கள்.

சிலர் வெயிலை சமாளிக்க முடியாமல், பெரியகுடைகளை வைத்தும், சிலர் தலையில் துண்டை போட்டுக் கொண்டும் வெயிலை சமாளித்து வருகிறார்கள். நீண்ட நேரம் வெயிலில் இருக்க வேண்டியுள்ளதால், விவசாயிகளுக்கும், வியாபாரிகளுக்கும் உடல் நலக்கோளாறு ஏற்படுகிறது. அத்துடன், காய்கறிகள், கீரைகள், கருவேப்பிலை, கொத்தமல்லிதழை போன்றவை வெட்ட வெளியில் இருப்பதால் சுட்டெரிக்கும் வெயிலில் சீக்கிரம் வாடி, வதங்கி போய் விடுகின்றன. இதனால் விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்படுகிறது. எனவே விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் நலன் கருதியும், விளைபொருட்களை பாதுகாப்பாக வைத்திருந்து விற்க ஏதுவாகவும், தென்னம்பாளையம் மார்க்கெட்டில் மேற்கூரை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: