மந்த கதியில் சாலை பணி போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் கடும் பாதிப்பு

திருப்பூர், மார்ச் 8: திருப்பூரில், 60 அடி ரோடு பகுதியில் மந்த கதியில் நடக்கும் சாலை பணியால் பொதுமக்கள், தொழிலாளர்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி  கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். திருப்பூர் மாநகரப்பகுதி முழுவதும் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் அறிவிக்கப்பட்டு பல்வேறு பகுதிகளில் ஏராளமான பணிகள் நடந்து வருகிறது. குறிப்பாக திருப்பூர் பழைய பஸ் நிலையம் மற்றும் டவுன்ஹால் உள்பட ஏராளமான இடங்களில் பணிகள் நடந்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக திருப்பூர் குமார் நகரில் இருந்து பி.என் ரோட்டை இணைக்கும் 60 அடி ரோட்டில் கடந்த 2 மாதமாக சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது.

இதனால் வாகனங்கள் மார் நகர், புதிய பஸ் நிலையம், பெருமாநல்லூர், குன்னத்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் டீச்சர்ஸ் காலனி, பழைய போலீஸ் சூப்பிரண்டு ஆபிஸ் அருகில் உள்ள ரோடு வழியாக சென்று வருகிறது. ஆனால் இப்பகுதி ரோடுகள் ஒரு பஸ் செல்லும் அளவு மட்டுமே இருக்கும். இத்தகைய, ரோடுகளில் பஸ்கள் செல்லும் போது வேறு எந்த வாகனமும் செல்ல முடியாது. இதனால், காலை மற்றும் மாலை நேரத்தில் பணிக்கு செல்லும் தொழிலாளர்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கின்றனர்.

மேலும், சாலை பணிகள் நடைபெறுவதால் புஷ்பா தியேட்டர் அருகில் இருந்து செல்லும் இருசக்கர, நான்கு சக்கர வாகன ஓட்டிகள் மில்லர் பஸ் நிறுத்தம் அருகில் இருந்து பி.என் ரோட்டில் ஒரு வழிப்பாதையில் செல்கின்றனர். இவ்வாறு செல்லும் வாகன ஓட்டிகள் வேகமாக தங்களது வாகனங்களை ஒருவழிப்பாதையில் இயக்குவதால், பிற வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் விபத்துகுள்ளாகும் நிலைமை ஏற்படுகின்றது. மேலும் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த முறையான டிராபிக் போலீசாரை நியமிக்காமல் புதியதாக வரும் போலீசாரை பணியில் ஈடுபடுத்துவதால் போக்குவரத்தை ஒழங்குபடுத்துவதில் சுணக்கம் ஏற்படுகிறது. இதனால் மாலை நேரம் அதிக்கப்படியான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இதனால், ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதற்கு வழக்கத்தை விட கூடுதலாக ஒரு மணி நேரம் தேவைப்படுகிறது. ஆம்புலன்ஸ் கூட குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடிவதில்லை. எனவே சாலை அமைக்கும் பணிகளை திட்டமிட்டும், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாமலும் செய்ய வேண்டும். இப்பகுதியில் தகுந்த டிராபிக் போலீசாரை பணியில் அமர்த்த்தி போக்குவரத்தை ஒழுங்குபடுத்த வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், மாநகராட்சி நிர்வாகம் கண்டுகொள்வதில்லை.

Related Stories: