தீ பந்தம் வீசி யானையை கொன்ற வழக்கில் தலைமறைவாக உள்ள வாலிபரை பிடிக்க போலீஸ் உதவியை நாடியது வனத்துறை

ஊட்டி, மார்ச் 8: ஊட்டி அருகே தீ பந்தம் வீசி  காட்டு யானையை கொன்ற சம்பவத்தில் தலைமறைவாக உள்ள ரிக்கி ராயன் என்பவரை பிடிக்க போலீசாரின் உதவியை வனத்துறை நாடியுள்ளது. நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட மாவனல்லா பகுதியில் சுற்றி திரிந்த எஸ்ஐ என்று அழைக்கப்படும் 50 வயதான காட்டு யானை மீது ரிசார்ட் உரிமையாளர்கள் கடந்த ஜனவரி மாதம் தீ பந்தத்தை வீசி எறிந்தனர். இதில், படுகாயமடைந்த யானை கடந்த ஜனவரி மாதம் 19ம் தேதி உயிரிழந்தது.

ரிசார்ட் உரிமையாளர்கள் தீ பந்தத்தை யானை மீது வீசி எறியும் வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வீடியோவின் அடிப்படையில் காட்டு யானை மீது தீ பந்தம் எறிந்த மசினகுடிைய சேர்ந்த பிரசாத் (36), மாவனல்லா, குரூப் அவுஸ் பகுதியை சேர்ந்த மல்லன் என்பவரின் மகன் ரேமண்ட் டீன் (28) ஆகியோர் கடந்த ஜனவரி மாதம் கைது செய்யப்பட்டனர்.இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட ரேமண்ட்டின் சசோதரர் ரிக்கி ராயன் (31) கடந்த ஒன்றரை மாதங்களுக்கும் மேலாக தலைமறைவாக உள்ளார். தலைமறைவாக உள்ள ரிக்கி ராயனின் முன் ஜாமீன் மனுவையும் ஊட்டி நீதிமன்றம் கடந்த மாதம் தள்ளுபடி செய்தது.

இதனிடையே, ரிக்கி ராயனை பிடிக்க போலீசாரின் உதவி நாடப்பட்டுள்ளதாகவும், விரைவில் கைது செய்யப்படுவார் எனவும் வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதுமலை புலிகள் காப்பக உயரதிகாரிகள் கூறுகையில்,`தலைமறைவாக உள்ள ரிக்கி ராயன் வெளி மாவட்டங்களில் பதுங்கி இருப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. இருப்பினும், அவரை தேடி கைது செய்வதில் சிரமம் உள்ளதால் அவரை பிடிக்க போலீசாரின் உதவியை நாடி உள்ளோம். விரைவில் கைது செய்யப்படுவார். கைது செய்யப்பட்ட மற்ற இருவர் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, என்றனர்.

Related Stories: