மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகளுக்கு தேர்தல் பணியில் விலக்கு அளிக்க கோரிக்கை

ஊட்டி, மார்ச் 8: தேர்தல் பணியில் இருந்து மாற்றுத்திறனாளிகள், இதயநோய் பாதிப்பு உள்ளவர்கள், கர்ப்பிணிகள் உள்ளிட்டோருக்கு விலக்கு அளிக்க வேண்டும் என ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் தினகரன், மாவட்ட கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 6ம் தேதி நடைபெற உள்ளது. நீலகிரி மலை மாவட்டம் என்பதால் தேர்தல் பணிக்கு செல்லும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அவர்கள் பணியாற்றும் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குசாவடிகளிலேயே பணி வழங்க வேண்டும்.

 சுமார் 50 கி.மீ., முதல் 100 கி.மீ.,க்கு மேல் போக்குவரத்து வசதிகள் குறைந்த கிராமங்களில் தேர்தல் பணிக்கு செல்லும் பெண் ஆசிரியர்கள் மற்றும் பெண் ஊழியர்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்கள் தேர்தலுக்கு முந்தையநாள் வாக்குசாவடிகளை சென்றடைவதற்கும் தேர்தல் பணி முடிந்த பிறகு வாக்குசாவடியில் இருந்து புறப்பட்டு தங்கள் ஊர்களுக்கு செல்வதற்கு உரிய இடத்திற்கு சென்றடைய அந்தந்த மண்டல அலுவலர்கள் மூலமாக போக்குவரத்து வசதிகளை செய்து தர வேண்டும். கொரோனா காலத்தில் வாக்குசாவடியில் தேர்தல் பணியில் ஈடுபட்டுளு–்ள ஊழியர்களுக்கு உணவு வழங்கிட மாவட்ட தேர்தல் அமைப்பு மூலமாக ஏற்பாடு செய்ய வேண்டும்.

சட்டமன்ற தேர்தல் பணியில் இருந்து மாற்றுத்திறனாளிகள், இதயநோய், சிறுநீரக நோய் உள்ளிட்ட கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் ஆகியோருக்கு விலக்கு அளிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.

Related Stories: