ஊரடங்கிற்கு பிறகு திறக்கப்பட்டது சூட்டிங்மட்டம் பகுதிக்கு 3 மாதத்தில் 1.55 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை

ஊட்டி, மார்ச் 8:  கொரோனா ஊரடங்கு தளர்விற்கு பின் கடந்த டிசம்பர் மாதம் திறக்கப்பட்ட சூட்டிங்மட்டத்திற்கு கடந்த 3 மாதத்தில் மட்டும் 1.55 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து சென்றுள்ளனர். நீலகிரி மாவட்டம் ஊட்டி - கூடலூர் சாலையில் 9வது மைல் பகுதியில் புல்வெளிகள் நிறைந்த மலைப்பகுதிகள் உள்ளன. இப்பகுதியில் அனைத்து மொழி திரைப்படங்களும் எடுக்கப்பட்டு வந்ததால் சூட்டிங்மட்டம் என பெயர் பெற்றது. வனத்துறை கட்டுபாட்டில் உள்ள இப்பகுதி பகல்கோடுமந்து சூழல் மேம்பாட்டு குழு மூலம் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

 இயற்கை எழில் சூழ்ந்த இப்பகுதி புல்வெளிகளையும், மலைகளையும் காண சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டுவது வழக்கம். இதனிடையே கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தளங்களும் மூடப்பட்டன. சுற்றுலா பயணிகள் வருகைக்கும் தடை விதிக்கப்பட்டது. இந்த சூழலில் அரசு பல்வேறு தளர்வுகள் அளித்த நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 7ம் தேதி முதல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தளங்களையும் திறக்க அனுமதி வழங்கியது. இதனை தொடர்ந்து சூட்டிங்மட்டம் பகுதியும் சுற்றுலா பயணிகளின் பார்வைக்காக திறக்கப்பட்டது.  இ-பாஸ் முறையிலும் தளர்வு அளிக்கப்பட்டதால் வெளி மாநில சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்தது. இதன் காரணமாக சூட்டிங்மட்டம் பகுதி களை கட்டியது.

இதனால் டிசம்பர் மாதத்தில் 32 பேரும், ஜனவரியில் 63 ஆயிரம் பேரும், பிப்ரவரியில் 60 ஆயிரம் பேரும் என கடந்த 3 மாதத்தில் மட்டும் 1.55 லட்சம் சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே கேரளாவில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில், கேரள சுற்றுலா பயணிகள் வருகைக்கு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், கடந்த 10 நாட்களாக சூட்டிங்மட்டத்திற்கு வர கூடிய சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: