×

மகளிர் தினத்தை முன்னிட்டு கோவை அரசு மருத்துவமனையில் மகளிருக்கு தனி கொரோனா தடுப்பூசி மையம்

கோவை, மார்ச் 8: உலக மகளிர் தினத்தையொட்டி, கோவை அரசு மருத்துவமனையில் மகளிருக்கு என தனி சிறப்பு கொரோனா தடுப்பூசி மையம் இன்று முதல் பயன்பாட்டிற்கு வருகிறது. கோவை மாவட்டத்தில் 25 அரசு மருத்துவமனைகள், 79 தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நடந்து வருகிறது. சுகாதார பணியாளர்கள், முன்களப்பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வந்த நிலையில், கடந்த 1-ம் தேதி முதல் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது. அதன்படி, 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும், இணை நோய் உள்ள 45 வயது முதல் 60 வயது வரையிலான நபர்களுக்கும் தடுப்பூசி போடப்படுகிறது. இதில், நேற்று (7ம் தேதி) ஒரே நாளில் 1,084 ேபருக்கு தடுப்பூசி போடப்பட்டது. இந்நிலையில், உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களை பெருமைப்படுத்தும் விதமாக கோவை மாவட்ட சுகாதாரத்துறை சார்பில், மகளிருக்காக தனியாக கொரோனா தடுப்பூசி போடும் மையத்தை கோவை அரசு மருத்துவமனையில் ஏற்படுத்தியுள்ளனர்.

இந்த மையம் இன்று முதல் பயன்பாட்டிற்கு வருகிறது. இங்கு பெண்கள் தினமும் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து கோவை மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் ரமேஷ்குமார் கூறுகையில்,”மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்காக என சிறப்பு கொரோனா தடுப்பூசி மையம் கோவை அரசு மருத்துவமனையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இங்கு பெண்களுக்கு மட்டும் கொரோனா தடுப்பூசி போடப்படும். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. மகளிருக்கு பெருமை சேர்க்கும் விதமாக இம்முயற்சியை செய்துளோம்” என்றார்.

Tags : Coimbatore Government Hospital ,Women's Day ,
× RELATED மகளிர் தின விழா