×

₹1.30 கோடி மோசடி செய்த பெங்களூரு புரோக்கருக்கு கத்திக்குத்து போளூரில் 4 பேர் கைது; 2 பேருக்கு வலை ராணுவத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி

போளூர், மார்ச் 7: ராணுவத்திலும், ராணுவ கேன்டீனிலும் வேலை வாங்கி தருவதாக கூறி ₹1.30 கோடி மோசடி செய்த பெங்களூரு புரோக்கருக்கு போளூர் அருகே கத்திக்குத்து விழுந்தது. இதுதொடர்பாக, 4 பேரை கைது செய்த போலீசார், 2 பேரை தேடி வருகின்றனர். பெங்களூரு காசிப்பாளையத்தை சேர்ந்தவர் யோகேஸ்வரன் என்ற ஜான்பீட்டர்(54). இவர் ராணுவத்திலும், ராணுவ கேன்டீனிலும் வேலை வாங்கி தருவதாக பலரிடம் கூறி வந்துள்ளார்.
இதையறிந்த திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த பாடகம், மன்சுரபாத் பகுதியை சேர்ந்த ராமசாமி, செல்வமுத்து(24), எழிலரசன்(31), அரிதாஸ்(31), அருள், பூபாலன் உள்ளிட்ட 43 பேர், கடந்த ஒராண்டுக்கு முன்பு நபருக்கு ₹3 லட்சம் வீதம் மொத்தம் ₹1.30 கோடி பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

ஆனால், சொன்னபடி ஜான்பீட்டர் வேலை ஏதும் பெற்று தரவில்லையாம். பணம் தந்தவர்கள் தொடர்ந்து நெருக்கடி கொடுத்ததால் போலி பணி நியமன ஆணையை தயாரித்து அவர்களிடம் கொடுத்துள்ளார். பின்னர், இதையறிந்து அதிர்ச்சி அடைந்த 43 பேரும் திருவண்ணாமலை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தனர். ஆனால், போலீசார் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. ஆனால், பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் நடவடிக்கை எடுக்கக்கோரி தொடர்ந்து போலீசாரிடம் வற்புறுத்தி வந்ததால், ஜான்பீட்டரை பெங்களூரு சென்று நீங்களே அழைத்து வாருங்கள், அவரிடம் விசாரணை நடத்தி பணத்தை பெற்றுத்தருகிறோம் என போலீசார் கூறினார்களாம்.

அதன்பேரில், நேற்று முன்தினம் செல்வமுத்து உள்ளிட்ட 6 பேரும் பெங்களூரு சென்று, ஜான்பீட்டரிடம் போளூர் வாருங்கள் அங்கு வைத்து பேசிக் கொள்ளலாம் அழைத்துள்ளனர். அதன்பேரில், போளூருக்கு வந்த ஜான்பீட்டரிடம் செல்வமுத்து உள்ளிட்ட 6 பேரும் தங்களது பணம் எப்போது கிடைக்கும் என கேட்டுள்ளனர். அப்போது, வாக்குவாதம் ஏற்பட்டதில் ஜான்பீட்டரை, 6 பேரும் சேர்ந்து சரமாரியாக தாக்கியதுடன், கத்தியாலும் குத்தியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த அவர் அவர்களிடம் இருந்து தப்பித்து தனியார் மருத்துவமனையில் சேர்ந்து, போளூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி, சப்-இன்ஸ்பெக்டர் தரணி ஆகியோர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். பின்னர் ராமசாமி, செல்லமுத்து, எழிலரசன், அரிதாஸ் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள அருள், பூபாலனை தேடி வருகின்றனர்.

Tags : Bangalore ,
× RELATED பெங்களூரு வணிக வளாகத்தில் தீ விபத்து:...