வந்தவாசி அருகே மனைவியை தாக்கியதாக புகார்: விசாரணை நடத்த சென்ற போலீஸ் ஏட்டு மண்டை உடைப்பு பெயின்டர் கைது

வந்தவாசி, மார்ச் 7: வந்தவாசி அருகே குடும்ப தகராறில் பெண் அளித்த புகார் குறித்து விசாரணை நடத்த சென்ற போலீஸ் ஏட்டின் மண்டை உடைக்கப்பட்டது. இதுதொடர்பாக பெயின்டரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

சென்னை செங்குன்றம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக்(35), பெயிண்டர். சைதாப்பேட்டையை சேர்ந்தவர் நித்யா(27). இருவரும் காதலித்து கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஷோபா(9) என்ற மகள், ஜெகதீஸ்(7) என்ற மகன் உள்ளனர். இந்நிலையில், மனைவி நித்யா மீது கார்த்திக் சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறு செய்வது வழக்கமாம். இதனால் வேதனையடைந்த நித்யா, தனது 2 குழந்தைகளுடன் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த கீழ்கொடுங்காலூர் கிராமத்தில் உள்ள தனது தங்கை லதா(25) வீட்டிற்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 4ம் தேதி கீழ்கொடுங்காலூர் கிராமத்திற்கு வந்த கார்த்திக், மனைவி நித்யாவிடம் தகராறு செய்து அவரை சரமாரியாக தாக்கியுள்ளார். அதை தடுக்க வந்த லதாவின் கணவர் கணேஷையும் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த நித்யா, கணேஷ் ஆகிய இருவரும் வந்தவாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுதொடர்பாக நித்யா கொடுத்த புகாரின் பேரில் கீழ்கொடுங்காலூர் போலீஸ் ஏட்டு குமார்(40) நேற்று முன்தினம் கார்த்திக்கிடம் விசாரணை நடத்த லதா வீட்டுக்கு சென்றார். அப்போது அங்கிருந்த கார்த்திக், ஏட்டு குமாரிடமும் தகராறு செய்து அவரை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் மண்டை உடைந்த குமார், வந்தவாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். பின்னர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

இதுகுறித்து மனைவி நித்யா, ஏட்டு குமார் ஆகியோர் தனித்தனியே கொடுத்த புகாரின் பேரில் கீழ்கொடுங்காலூர் எஸ்ஐ விஜயகுமார், கொலை முயற்சி உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தார். தொடர்ந்து, பெயிண்டர் கார்த்திக்கை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். விசாரணை நடத்த சென்ற போலீசின் மண்டை உடைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: