₹3.15 லட்சத்தில் அரைகுறையாக நின்ற சாலை பணிகள் முழுமையடைந்தது போர்டில் இருந்த விவரங்களை அழித்த அதிகாரிகள் குடியாத்தம் கொண்டசமுத்திரம் ஊராட்சியில்

குடியாத்தம், மார்ச் 7: தினகரன் செய்தி எதிரொலியாக, ₹3.15 லட்சத்தில் அரைகுறையாக நின்ற சாலை பணிகள் முழுமையடைந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். ஆனால் போர்டில் உள்ள விவரங்களை அதிகாரிகள் அழித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கொண்டசமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட வள்ளலார் நகர் 3வது தெருவில் 200க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள சாலை குண்டும் குழியுமாக காணப்பட்டதால், சாலை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில் கொண்டசமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட வள்ளலார் நகர் 3வது தெருவில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு சாலை அமைப்பதற்கான பணிகள் தொடங்கியது. சாலையை முழுமையாக போடாமல் பாதியிலேயே விட்டுவிட்டனர்.

ஆனால், சாலை அமைத்ததற்கான சிமெண்ட் போர்டு மட்டும் ஊராட்சி சார்பில் வைக்கப்பட்டுவிட்டது. அந்த சிமெண்ட் போர்டில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் கடந்த 2019-2020ம் ஆண்டு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை சார்பில் ₹3.15 லட்சம் நிதியில், கடந்த ஆண்டு மே மாதம் 11ம் தேதி பணி தொடங்கியது. செப்டம்பர் 21ம் தேதி பணி முடிந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.  இப்படி சாலை அமைக்கும் பணிகள் முழுமைபெறாமலேயே, பணிகள் முடிவுற்றதாக அதிகாரிகள் கணக்கு காட்டியுள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக ஆய்வு செய்து, சாலை அமைத்ததாக, அந்த பணம் முறைகேடு செய்யப்பட்டுவிட்டதா?, தேர்தலுக்காக அவசரகதியில், அரைகுறை சாலை போடப்பட்டதா? என்று விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தினகரன் நாளிதழில் படத்துடன் கூடிய விரிவான செய்தி கடந்த 5ம் தேதி வெளியானது.

இந்நிலையில் நேற்று, பாதியில் நிறுத்தப்பட்ட சாலை முழுமையாக போடப்பட்டது. அதோடு அரசு அதிகாரிகள் வைத்திருந்த போர்டில் எழுதப்பட்டிருந்த பணி தொடங்கிய நாள், பணி முடிவடைந்த நாள், மனித சக்தி நாட்கள், தினசரி கூலி மற்றும் அளவீடு ஆகியவை பெயிண்டால் அழிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சாலை அமைக்கும் பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டிருந்தாலும், இந்த பணியில் முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் குறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: