தேர்தல் பிரசார வாகனங்களில் மாற்றங்கள் செய்தால் நடவடிக்கை வட்டார போக்குவரத்து அலுவலர்கள் எச்சரிக்கை தடையில்லா சான்று பெற்ற பின்பு

வேலூர், மார்ச் 7: தடையில்லா சான்று பெற்ற பிறகு தேர்தல் பிரசார வாகனங்களில் எந்த மாறுதலும் செய்யக்கூடாது என வட்டார போக்குவரத்து அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக வேட்பு மனு தாக்கல் வரும் 12ம் தேதி தொடங்கி, 19ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. 20ம் தேதி மனுக்கள் பரிசீலனையும், 22ம் தேதி வேட்புமனு வாபஸ் பெறவும் கடைசி நாளாகும். 23ம் தேதி முதல் வேட்பாளர்கள் பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர். பிரசாரம் செய்ய 15 நாட்களுக்கும் குறைவாக உள்ளது. இதனால் அனைத்து கட்சியினர் தேர்தல் பிரசார தேதி இடங்கள் குறித்து கட்சியினருடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

தேர்தல் பிரசார பணிகளுக்கு டூரிஸ்ட் டாக்சி, டெம்போ, கார், ஆம்னி வேன்கள் உள்ளிட்ட வாகனங்கள் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. தேர்தல் பிரசாரத்துக்கு வாகனங்களை பயன்படுத்த, மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் அனுமதி பெற வேண்டும். முதலில் மாவட்ட தேர்தல் அலுவலரிடம் பரிந்துரை கடிதம் பெற்று, வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் தடையில்லா சான்றிதழுக்காக விண்ணப்பிக்க வேண்டும். அங்கு, வட்டார போக்குவரத்து அதிகாரிகள், ஆவணங்கள் மற்றும் வாகனங்களின் நிலையை ஆய்வு செய்து தடையில்லா சான்று வழங்குவார்கள்.

அதன் பின்னர் தேர்தல் பிரசாரத்துக்கு தடையில்லா சான்று பெற்ற வாகனங்களை பயன்படுத்தலாம். தடையில்லா சான்று பெற்ற பிறகும் தேர்தல் பிரசார வாகனங்களில் பல்வேறு மாறுதல்கள் செய்யப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளது. ஆனால் வாகனங்களில் எந்த மாறுதலும் செய்யக்கூடாது. இதுகுறித்து வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கூறியதாவது: தேர்தல் பிரசார வாகனங்கள், தடையில்லா சான்று பெற வரும்போது, வாகனத்தின் அனுமதி சீட்டு, பதிவுச்சான்று, தகுதிச்சான்று மற்றும் புகைச்சான்று, போக்குவரத்து வாகன உரிமம் ஆகியவை நடைமுறையில் இருக்க வேண்டும். அதேபோன்று, வாகன உரிமையாளர் மற்றும் ஓட்டுனரின் முழு விபரம், ஓட்டுனர் உரிமம் எண், பொதுப்பணி வில்லை எண் (பேட்ஜ் நம்பர்) ஆகியவை ஆய்வு செய்யப்படுகிறது.

அனைத்தும் சரியாக இருந்தால் தேர்தல் பிரசார வாகனங்களுக்கு தடையில்லா சான்றிதழ் வழங்கப்படுகிறது. அனுமதி பெற்ற பிறகு இந்த வாகனங்களில் தேர்தல் பிரசாரத்துக்காக எந்த மாறுதலும் செய்யக்கூடாது. விதியை மீறி மாறுதல் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து கட்சிகளின் தொகுதி பங்கீடு மற்றும் வேட்பாளர் அறிவிப்புக்கு பிறகு தடையில்லா சான்று பெறுவதற்கு அதிக தேர்தல் பிரசார வாகனங்கள் வரும் என எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: