வாக்குச்சாவடிகளில் கொரோனா தடுக்க நோயாளிகளுக்கு பாதுகாப்பு கவச உடை: சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்; முகக்கவசம் அணியாவிட்டால் அனுமதியில்லை

வேலூர், மார்ச் 7: வாக்குச்சாவடிகளில் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க பாதுகாப்பு கவச உடைகள் ஒதுக்கீடு செய்யப்படுவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். சட்டப்பேரவை தேர்தலில் கொரோனா நோயாளிகள் வாக்களிக்க வசதியாக தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. முதற்கட்டமாக கொரோனா பாதிப்பு மற்றும் அறிகுறி உள்ளவர்கள் தபால் ஓட்டு படிவங்கள் பெற்று வாக்களிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு உள்ள நிலையில் வாக்குச்சாவடிக்கு நேரில் வந்து வாக்களிக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதற்காக வாக்குப்பதிவு நாளில் கடைசி ஒரு மணி நேரம் நோயாளிகளுக்காக ஒதுக்கப்படும் என்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ேமலும் கொரோனா நோயாளிகள் வாக்குச்சாவடிகளுக்கு வந்து வாக்களிக்க வசதியாகவும், மற்றவர்களுக்கு தொற்று பரவாமல் பாதுகாக்கவும் கொரோனா பாதுகாப்பு கவச உடை ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் குறிப்பிட்ட அளவில் ஒதுக்கீடு செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. கொரோனா அறிகுறி அல்லது கொரோனா தொற்று இருப்பவர்கள் வாக்குச்சாவடி அலுவலரிடம் இருந்து பாதுகாப்பு கவச உடை பெற்று, அதை அணிந்து வந்து வாக்களிக்கலாம். மேலும் வாக்குச்சாவடிக்கு வரும் ஒவ்வொரு வாக்காளர்களும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வந்தால் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories:

>