திருவண்ணாமலை, ஜூன் 13: மேகதாது அணை கட்டும் பிரச்னையில் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருவண்ணாமலையில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா கூறினார். திருவண்ணாமலையில் நேற்று மாலை கிரிவலப்பாதையில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து, பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா ஆய்வு செய்தார். அப்போது, கலெக்டர் வந்தனாகார்க், எஸ்பி சுதாகர் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் உடனிருந்தனர். அதைத்தொடர்ந்து, அமைச்சர் ஆதவ் அர்ஜூனா அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது:
தமிழ்நாட்டில் அதிகமான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகின்றனர். பவுர்ணமி நாளில் 5 லட்சம் முதல் 10 லட்சம் பேரும், தீபத்திருவிழாவுக்கு 25 லட்சம் பேரும் வருகின்றனர். இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. தீபத்திருவிழாவுக்கு பக்தர்கள் வருகை 50 லட்சமாக அதிகரித்தால் என்ன செய்ய போகிறோம், அதற்காக என்ன திட்டமிடப்போகிறோம் என ஆய்வு செய்தோம்.
