×

ரீல்சாக சமூக வலைதளத்தில் பதிவேற்றம்; இளைஞர்களிடம் சிகரெட்டா, கஞ்சாவா என கேட்டு மிரட்டிய தவெக நிர்வாகி

திருப்பத்தூர், ஜூன் 13: திருப்பத்தூர் பஸ் நிலையத்தில் டீ குடிக்க வந்த மாணவர்களிடம் சிகரெட் பிடிக்கிறீங்களா? அல்லது கஞ்சா அடிக்கிறீங்களா என தவெக நிர்வாகி கேட்டு மிரட்டியுள்ளார். மேலும் அதனை வீடியோ எடுத்து ரீல்சாக இணையத்தில் பதிவிட்டுள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் திருப்பத்தூர் மத்திய நகர செயலாளராக அச்சுதன் என்பவர் உள்ளார். இந்நிலையில், திருப்பத்தூர் புதிய பஸ் நிலையத்தில் உள்ள டீக்கடையின் பின்புறம் இளைஞர்கள், மாணவர்கள் டீ குடிக்க வந்திருந்தனர். அப்போது இளைஞர்கள் புகை பிடித்ததாக கூறப்படுகிறது. இதனையறிந்த நகர செயலாளர் அச்சுதன் போலீசாருக்கு சொல்லாமல், அவரே ஒரு போலீஸ் அதிகாரிபோல் சம்பவ இடத்திற்கு
சென்றுள்ளார்.

தொடர்ந்து அங்கிருந்த இளைஞர்களிடம் சிகரெட் பிடிக்கிறீங்களா?, இல்ல கஞ்சா அடிக்கிறீங்களா என கேள்வி எழுப்பி உள்ளார்‌. தொடர்ந்து அங்கு நடந்ததை வீடியோவாக எடுத்து சமூக வலை தளங்களில் ரீல்ஸாக வெளியிட்டுள்ளார். அதேபோல் திருப்பத்தூர் பஸ் நிலையத்தில் இயங்கும் ஓட்டல் சமையலறையில் அத்துமீறி நுழைந்து ஊழியர்களிடம் ேகள்வி எழுப்பி மிரட்டி உள்ளார்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: பஸ் நிலைய டீக்கடைகள், ஓட்டல்களில் தவெக நகர செயலாளர் காவல்துறை அதிகாரி போல் நுழைந்து அனைவரையும் மிரட்டுவதும், கடைஉரிமையாளர்களிடம் அதிகாரிகள் போல் கேள்வி எழுப்புவதும் கண்டிக்கத்தக்கது. தவெகவினர் கட்சிப் பணியை தான் பார்க்க வேண்டும். இவர்கள் போலீஸ் ரைடு போல் தன்னிச்சையாக வந்து இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களை மிரட்டி வீடியோ எடுத்து ரீல்ஸாக வெளியிடுவது எந்த விதத்தில் நியாயம்.மாணவர்களை புகைப்படம் எடுக்க கூடாது, அவர்களின் முகத்தை காட்டக் கூடாது என நீதிமன்றமே அறிவித்துள்ளது. அதனை மீறி தவெகவினர் வீடியோ எடுத்து ரீல்ஸ் வெளியிட்டு வருகின்றனர். தவெக தலைமை கழகமே இதுபோன்ற செயல்களில் யாரும் ஈடுபடக்கூடாது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மட்டுமே ஆய்வுப்பணிகள் உள்ளிட்டவைகளை செய்ய வேண்டும். கட்சியினர் கட்சி விதிமுறையை மீறக்கூடாது என்று தெரிவித்த போதிலும், தவெக நிர்வாகிகளின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினர்.

Tags : Thaveka ,Tirupattur ,Tamil Nadu Victory Party… ,
× RELATED தமிழக- ஆந்திரா வனப்பகுதியில் கழுதை...