மண்ணச்சநல்லூர் அருகே 3 மாதமாக கிடப்பில் கிடக்கும் சாலை பணி

மண்ணச்சநல்லூர், மார்ச் 7: மண்ணச்சநல்லூர் அருகே கீழப்பட்டியில் ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டதோடு 3 மாதமாக தார் சாலை பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் அவ்வழியாக செல்லும் பஸ் இயக்கப்படாததால் கிராம மக்கள் நடந்து செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது. திருச்சி சத்திரம் பஸ் நிலையத்திலிருந்து அரசு பஸ்கள் மண்ணச்சநல்லூர், அய்யம்பாளையம், தத்தமங்கலம், 94 கரியமாணிக்கம் பிரிவு சாலையில் இருந்து கீழப்பட்டி, ஓமாந்தூர் வழியாக ஒரு நாளைக்கு 24 முறை சென்று வருகின்றன. அரசு பஸ்சில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கல்லூரி மற்றும் புத்தனாம்பட்டி, கீழப்பட்டி, ஓமந்தூர், சிறுகுடி, தத்தமங்கலம், அய்யம்பாளையம் ஆகிய பகுதிகளில் இருந்து நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கான கூலித் தொழிலாளிகள் சென்று வருகின்றனர்.

இந்நிலையில் 94 கரியமாணிக்கம் பெரிய சாலையிலிருந்து கீழப்பட்டி வரை 3 கி.மீ. தூரத்திற்கு ஒன்றிய நிதியிலிருந்து தார் சாலை அமைக்கும் பணிக்காக கடந்த டிசம்பர் மாதம் இச்சாலையில் ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டன. இந்நிலையில் கீழப்பட்டி, புத்தனாம்பட்டி செல்லும் அரசு பஸ் முற்றிலுமாக தடை செய்யப்பட்டன. இதனால் கீழப்பட்டி பொதுமக்கள் 3 கி.மீ. நடந்து சென்று 94 கரியமாணிக்கம் பிரிவு சாலையில் பஸ்சிற்கு செல்ல நேரிடுகின்றன. இதனால் தினக்கூலி தொழிலாளர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் செல்வதற்கு காலதாமதம் ஆகிறது. இரவு நேரங்களில் 3 கி.மீ. நடந்து செல்வது மிகவும் சிரமமாக உள்ளது என அப்பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி கவலையுடன் கூறினார்.

எனவே தற்போது சட்டமன்ற தேர்தல் அறிவித்துள்ள நிலையில் பஸ்கள் இல்லாத நிலையில் எங்களுக்கு மிகவும் சிரமத்தை அளிக்கின்றன. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து போர்க்கால அடிப்படையில் கிடப்பில் போடப்பட்ட 3 கி.மீ தார் சாலையை உடனடியாக அமைத்து தர வேண்டும் என கீழப்பட்டி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>