தியாகராஜசுவாமி கோயிலில் 25ம் தேதி ஆழித்தேரோட்டம்

திருவாரூர், மார்ச் 7: திருவாரூரில் வரலாற்று சிறப்புமிக்க கோயில் தியாகராஜசுவாமி கோயில். இக்கோயில் சைவசமயத்தின் தலைமைபீடமாகவும், பிறக்க முக்தியளிக்கும் ஸ்தலமாகவும் , சமய குறவர்கள் நால்வராலும் பாடல் பெற்ற ஸ்தலமாகவும் தலமாகவும் இருந்து வருகிறது. மேலும் கோயில் 5 வேலி, குளம் 5 வேலி, ஓடை 5 வேலி என நிலப்பரப்பினை கொண்ட இக்கோயிலின் மூலவராக வன்மீகநாதரும்,உற்சவராக தியாகராஜரும் இருந்து வருகின்றனர். இக்கோயிலின் ஆழித்தேரானது ஆசிய கண்டத்திலேயே மிகப்பெரிய தேர் என்றும் அழைக்கப்பட்டு வருகிறது. கோயிலின் விழாக்களில் பங்குனி உத்திர விழாவானது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆழித்தேரோட்டமும் அதன் பின்னர் கோயிலின் மேற்கு புறத்தில் உள்ள கமலாலய குளத்தில் தெப்ப திருவிழாவும் நடைப்பெறுவது வழக்கம்.

இந்நிலையில் கொரோனோ காரணமாக கடந்தாண்டு நடைபெற வேண்டிய தேரோட்டம் மற்றும் தெப்ப திருவிழா நடைபெறவில்லை. இந்நிலையில் தற்போது கொரோனோவின் தாக்கம் குறைந்துள்ளதால் நடப்பாண்டில் இந்த ஆழித்தேரோட்ட விழாவினை நடத்துவதற்கு அறநிலையதுறை சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக கடந்த ஜனவரி மாதம் 28ம்தேதி பந்தகால் முகூர்த்தம் நடைபெற்றது. விழா துவக்கத்திற்காக மஹாதுவஜாரோகணம் எனப்படும் கொடியேற்றும் நிகழ்ச்சியானது கடந்த 2ம்தேதி நடைபெற்றது. இந்நிலையில் குறைந்தநாட்களே இருப்பதால் ஆழித்தேர் கட்டுமான பணி மற்றும் ஆழித்தேரில் விட்டவாசல் வழியாக தியாகராஜர் எழுந்தருளுவதற்கு பந்தல் அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

Related Stories: