சென்னை: தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் அமைச்சரவை பதவியேற்பு நிகழ்ச்சி மே 10ம் தேதி ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதலில் வந்தே மாதரமும், தேசிய கீதமும் பாடப்பட்டு, மூன்றாவதாக தமிழ்த் தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. இது தமிழக மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், அரசு நிகழ்ச்சிகளை தமிழ்த் தாய் வாழ்த்து பாடி தொடங்குவதை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரி சென்னையை சேர்ந்த அனன்யா ராதாகிருஷ்ணன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார்.
அவரது மனுவில், தமிழ்நாட்டில் அரசு நிகழ்ச்சிகள், தமிழ்த்தாய் வாழ்த்து பாடி தொடங்கப்படுவதும், தேசிய கீதம் இசைத்து நிறைவு செய்வதும் பல ஆண்டுகளாக மரபாக பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த நடைமுறையை நீர்த்துப் போகச் செய்யும் வகையில், அரசு நிகழ்ச்சிகளில் வந்தே மாதரமும், தேசிய கீதமும் பாடப்பட்ட பிறகே தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்படுகிறது. அரசு நிகழ்ச்சியை வந்தே மாதரம் பாடியே துவங்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த ஜனவரி 28ம் தேதி பிறப்பித்த சுற்றறிக்கையில், மாநில பாடலை பாடி அரசு நிகழ்ச்சியை துவங்க எந்த தடையையும் விதிக்கவில்லை. தமிழ்த் தாய் வாழ்த்து பாடுவது வெறும் சடங்கு அல்ல. அது தமிழர்களின் உணர்வு, கலாச்சாரம் மற்றும் அடையாளமாக உள்ளது.
எனவே, வந்தே மாதரம் பாடலை முதலில் பாட வலியுறுத்தி, ஒன்றிய அரசு பிறப்பித்த சுற்றறிக்கையை ரத்து செய்ய வேண்டும். எதிர்காலத்தில் அரசு நிகழ்ச்சிகளில் இந்த கலாச்சார மோதலை தவிர்க்கும் வகையில், தமிழ்த் தாய் வாழ்த்தை முதலில் பாடுவதற்கு தகுந்த நிர்வாக அறிவுறுத்தல்களை பிறப்பிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு, இந்த வழக்கில் ஒன்றிய, மாநில அரசுகள் 8 வாரங்களில் பதிலளிக்குமாறு உத்தரவிட்டது.
