×

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: அரசு பள்ளி ஆசிரியர் கைது

 

அரியலூர்: அரியலூர் அருகே அரசு பள்ளியில் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியர் போக்சோவில் கைது செய்யப்பட்டார். அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அடுத்த பூண்டி அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக அகஸ்டின் மங்களராஜ்(54) பணிபுரிந்து வருகிறார். இவர் தனது வகுப்பில் பயிலும் மாணவிகள் சிலரை தொட்டு தொட்டு பேசி பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவிகள், அவர்களது பெற்றோர் மற்றும் பள்ளி தலைமையாசிரியரிடம் புகார் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக பள்ளி கல்வி துறைக்கு தலைமையாசிரியர் தகவல் தெரிவித்தார். இதையடுத்து கல்வித்துறை அதிகாரிகள் பள்ளிக்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது மேலும் சில மாணவிகள் தங்களையும் ஆசிரியர் தொட்டு பேசி பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக தெரிவித்தனர். தகவலறிந்து வந்த அரியலூர் மகளிர் போலீசார் மற்றும் சிங்கப்பெண் காவல் சிறப்பு படையினர் மாணவிகள், ஆசிரியர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். இதில் ஆசிரியர் மங்களராஜ் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது உறுதியானது.

இதையடுத்து அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து மங்களராஜை நேற்று கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் அரியலூர் குழந்தைகள் நல அலுவலர் இன்று பள்ளியில் விசாரணை நடத்த உள்ளார். அதன்பின்னர் ஆசிரியர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

Tags : Ariyalur ,Boxo ,Augustine Mangalraj ,Bundi Government Union Secondary School ,Kalapapuwur ,
× RELATED பல்லாவரம் அருகே இன்று அதிகாலை கொடூரம்;...