பந்தலூர்: நீலகிரியில் 2 பேரை அடித்துக்கொன்ற காட்டு யானைகளை விரட்ட 2 கும்கிகள் வரவழைக்கப்பட்டு உள்ளன. நீலகிரி மாவட்டம், கூடலூர் வனக்கோட்டம், பிதர்காடு வனச்சரகத்திற்குட்பட்ட பாக்கனா மற்றும் பிதர்காடு ஓடோடும் வயல் ஆகிய இடங்களில் ஒரே வாரத்தில் 2 பேரை காட்டு யானை தாக்கி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. காட்டு யானைகளிடமிருந்து உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். அப்போது குடியிருப்பு பகுதிக்குள் வரும் காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்த கோரிக்கையை ஏற்று வனத்துறை சார்பில் காட்டு யானைகளை விரட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி தெப்பக்காடு யானைகள் முகாமில் இருந்து விஜய் மற்றும் கிருஷ்ணா ஆகிய 2 கும்கிகள் வரவழைக்கப்பட்டன. அதன்மூலம் குடியிருப்பு பகுதிக்குள் வரும் காட்டு யானைகளை விரட்டும் பணி தொடங்கியது. கும்கிகள் வரவழைக்கப்பட்ட நாளில் இருந்து தொடர் மழை பெய்து வருவதாலும், கும்கி விஜய்க்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாலும் தற்போது காட்டு யானைகளை கண்காணித்து துரத்தும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
காட்டு யானைகள் பகல் நேரங்களில் ஊருக்குள் வருவது குறைவு. இரவு நேரங்களில் காட்டுயானைகள் ஊருக்குள் வருவதால் வனத்துறையினர் இரவு நேரங்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபடவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
