ஒருமுறை விலை நிர்ணயித்தால் நூல் விலையை 3 மாதங்களுக்கு அதிகரிக்கக் கூடாது

திருப்பூர், மார்ச் 7:  நூல் விலையை ஒரு முறை நிர்ணயித்தால் 3 மாதங்களுக்கு அதிகரிக்கக் கூடாது என சைமா கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் (சைமா) சங்க செயற்குழு கூட்டம், சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. சங்கத் தலைவர் வைகிங் ஈஸ்வரன் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் எம்பரர் பொன்னுசாமி முன்னிலை வகித்தார். செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் ஆலோசகர்கள் கலந்து கொண்டனர். இதில் தொடர்ந்து உயர்ந்து வரும் நூல் விலையையும், அதனால் பின்னலாடை உள்ளாடைகளுக்கு விலை நிர்ணயம் செய்யமுடியாமலும், உள்நாட்டு உற்பத்திக்கு தேவையான நூல் நூற்பாலைகள் வழங்குவதில் தட்டுப்பாடு ஏற்படுவது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: பின்னலாடை தொழிலும், நூற்பாலை தொழிலும் ஒன்றுடன் ஒன்று இணைந்து செயலாற்றியதால் தான் திருப்பூர் பின்னலாடை தொழில் குறிப்பிடத்தக்க உயர்வை அடைந்தது. சமீப காலமாக நூற்பாலைகள் நூல்விலையை மாதத்திற்கு ஒருமுறையும், சில நேரங்களில் இடையிலும் உயர்த்தி வருகின்றன. பின்னலாடை தொழிலில் ஈடுபட்டுள்ள உற்பத்தியாளர்கள் என்ன செய்வது என்பதை அறியாமல் இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

பின்னலாடை தொழிலில் ஈடுபட்டு தற்போது, பாதிப்பிற்குள்ளாகி உள்ள அனைத்து தொழில் நிறுவன சங்கங்களும் ஒன்று கூடி, நூற்பாலை சங்கத்தினரையும், நூற்பாலைகளையும் ஒருமுறை விலை நிர்ணயித்தால், 3 மாதத்திற்கு எந்த வித மாற்றமும் செய்ய வேண்டாம் என கேட்டுக்கொள்வது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Related Stories: