தெற்கு மற்றும் தாராபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் கலெக்டர் ஆய்வு

திருப்பூர், மார்ச் 7:  தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் - 2021 தொடர்பாக திருப்பூர் தெற்கு, பல்லடம் மற்றும் தாராபுரம் ஆகிய சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட கலெக்டர் நேற்று வாகன தணிக்கை மேற்கொண்டார். தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் -2021 வரும் 6ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி திருப்பூர் மாவட்டத்திலுள்ள 8 சட்டமன்ற தொகுதிகளுக்கு 24 பறக்கும் படை குழு, 4 நிலையான கண்காணிப்புக்குழுக்கள் மற்றும் 16 வீடியோ கண்காணிப்புக்குழுக்கள் அமைக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் தீவிர வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் திருப்பூர் கலெக்டர் விஜயகார்த்திகேயன் திருப்பூரில் நேற்று பல்வேறுஇடங்களில் வாகன தணிக்கையில் ஈடுபட்டார். தெற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வளம்பாலம், செல்லாண்டியம்மன் கோவில் அருகில், பல்லடம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அவிநாசிபாளையம் மற்றும் தாராபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தாராபுரம் - காங்கயம் சாலை பிரிவு மற்றும் தாராபுரம் - உடுமலைப்பேட்டை சாலை பொண்ணு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அருகில் ஆகிய இடங்களில் திடீர் தணிக்கை மேற்கொண்டார்.

அப்போது அனைத்து வாகனங்களையும் முழுமையாக சோதனை மேற்கொண்டதுடன் அந்த வாகனங்களின் விபரங்களையும் முழுமையாக பதிவிட வேண்டுமெனவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். முன்னதாக திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காங்கயம்பாளையம், புதூர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, மற்றும் தாராபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புனித அந்தோணியார் நடுநிலைப்பள்ளி ஆகிய வாக்குச்சாவடி மையங்களையும் மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வாக்காளர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்திட வேண்டுமென அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இந்நிகழ்வின் போது தாராபுரம் சப் கலெக்டர் பவன்குமார், வட்டாட்சியர்கள் சுந்தரம் (திருப்பூர் தெற்கு), ரவிச்சந்திரன் (தாரபுரம்) திருப்பூர் மாநகராட்சி உதவி ஆணையர்கள் சுப்பிரமணி, கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>