போக்குவரத்து துண்டிப்பை கண்டித்து மக்கள் ஆர்ப்பாட்டம்

சேத்தியாத்தோப்பு, மார்ச்7: சேத்தியாத்தோப்பிலிருந்து மேட்டுத்தெரு காளியம்மன்கோயில் வழியாக ஆணைவாரி, நல்லத்தண்ணீர்குளம், மணக்காடு செல்லும் சாலை புதிய பைபாஸ் சாலையை உயர்த்தி போட்டதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த ஆணைவாரி கிராம மக்கள் நேற்று திடீரென திரண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த சேத்தியாத்தோப்பு சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி, ஏட்டு அசோக் உள்ளிட்ட போலீசார் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.அப்போது ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் கூறும்போது, விக்கிரவாண்டி -தஞ்சாவூர் பைபாஸ் சாலை பணி சேத்தியாத்தோப்பு பேரூராட்சிக்கு அருகில் ஆணைவாரி விளைநிலங்கள் பகுதியில் நடந்து வருகிறது. இந்த பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் மேட்டுத்தெரு, முருகன் கோயில் தெருவைச் சேர்ந்தவர்கள் விளைநிலங்களில் விளையும் பொருட்களை ஆணைவாரி சாலை வழியாக கொண்டு வருகிறோம். மேலும், பள்ளி மாணவர்கள், நகர்புறத்திற்கு செல்வோர் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.தற்போது 15 அடி வரை சாலை உயர்த்தி போட்டுள்ளதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கலெக்டரிடமும், தாசில்தாரிடமும் மனு கொடுத்தும் எந்த பலனும் இல்லை என கூறினர். போலீசார் அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததின்பேரில் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு  கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories:

>