தேயிலை எஸ்டேட் தொழிலாளர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் செயல் விளக்க முகாம்

மஞ்சூர்,மார்ச்7: சுற்றுலா பயணிகள் மற்றும் தேயிலை எஸ்டேட் தொழிலாளர்கள் மத்தியில் தேர்தல் விழிப்புணர்வு மற்றும் வாக்குப்பதிவு இயந்திர செயல் விளக்க முகாம் நடத்தப்பட்டது. தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடக்கிறது. இதற்கான நடவடிக்கைகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் ஊட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குந்தா பகுதியில் தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களிடையே பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக நேற்று மஞ்சூர் பஸ் நிலையத்தில் குந்தா வருவாய்துறையினர் மற்றும் கீழ்குந்தா பேரூராட்சி சார்பில் 100 சதவீத வாக்குப்பதிவு மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் செயல் விளக்க முகாம் நடத்தப்பட்டது.

குந்தா தேர்தல் துணை வட்டாட்சியர் நந்தகோபால், கிராம நிர்வாக அலுவலர் லதா மற்றும் கீழ்குந்தா பேரூராட்சி செயல் அலுவலர் ரவிக்குமார் ஆகியோர் முன்னிலையில் பொதுமக்கள் மத்தியில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

தொடர்ந்து பஸ் நிலையத்தில் இருந்த பயணிகள் மற்றும் வாகன ஓட்டுனர்கள், வியாபாரிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்களிப்பது என்பது குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. இதே போல் மஞ்சூர் அருகே உள்ள சாம்ராஜ் எஸ்டேட் தேயிலை தொழிற்சாலையில் பணி செய்யும் தொழிலாளர்கள், தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மத்தியிலும் 100 சதவீத வாக்குப்பதிவு மற்றும் மின்னணு வாக்கு இயந்திரத்தின் செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.

Related Stories:

>