டெக்ஸ்டைல் தொழில் மேம்பாட்டுக்கு ஜவுளி பரிசோதனை கூடம் திறப்பு

கோவை, மார்ச் 7: கோவையில் டெக்ஸ்டைல் தொழில் மேம்பாட்டுக்காக ஜவுளி பரிசோதனை கூடம் திறக்கப்பட்டுள்ளது. கோவை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள ஜவுளித்தொழில் மேம்பாட்டுக்காக, தென்னிந்திய நூற்பாலைகள் சங்கம் (சிஸ்பா) மற்றும் பீளமேட்டில் உள்ள தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சி கழகம் (சிட்ரா) ஆகியவை சார்பில், சிஸ்பா வளாகத்தில் ஜவுளி பரிசோதனை கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவுக்கு சிஸ்பா தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார். இப்பரிசோதனை கூடத்தை, சிஸ்பா முன்னாள் தலைவர் சவுந்தர்ராஜன் துவக்கிவைத்தார்.

பின்னர் அவர் பேசுகையில், ‘’கோவை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர டெக்ஸ்டைல் நிறுவனங்கள் பயன்பெறும் வகையில், இந்த பரிசோதனை கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, பருத்தி மற்றும் நூலிழைகளின் இயல்பு ஆகியவற்றை, சர்வதேச தரத்தில், அதிநவீன ஆய்வக கருவி மூலம் பரிசோதனை செய்துகொள்ளலாம். இதன்மூலம், ஜவுளித்துறையில் தொழில்நுட்ப ரீதியான பிரச்னைகளுக்கு தீர்வுகாண முடியும்’’ என்றார்.

நிகழ்ச்சியில், சிட்ரா இயக்குனர் டாக்டர் பிரகாஷ் வாசுதேவன், சிஸ்பா துணை தலைவர் ஜெகதீஷ் சந்திரன், இந்திய ஜவுளி கூட்டமைப்பு தலைவர் ராஜ்குமார், இந்திய பருத்தி கூட்டமைப்பு தலைவர் துளசிதரன், ரூட்ஸ் நிறுவன இயக்குனர் கவிதாசன், சிஸ்பா துணை தலைவர்கள் செல்வன், விஜயகுமார், இணை செயலாளர் அருண் கார்த்திக், மேலாளர் வெங்கடேஷ் பிரபு, சிஸ்பா கவுரவ செயலாளர் வெங்கடேசன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Related Stories:

>