தபால் வாக்கு விண்ணப்பம் பெறுவோர் சான்றுடன் வாக்குச்சாவடி அலுவலரிடம் 15ம் தேதிக்குள் வழங்க வேண்டும்

கோவை, மார்ச் 7:  கோவை மாவட்ட கலெக்டர் ராஜாமணி தெரிவித்துள்ளதாவது: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி, 80 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள், கொரோனா பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் ஆகியோர் வாக்குச்சாவடிக்கு நேரில் சென்று வாக்களிப்பதிலிருந்து விலக்களிக்கப்பட்டு தபால் வாக்கு அளிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் இவர்கள் தபால் வாக்கு அளிப்பதற்கு அவர்களது இருப்பிடத்திற்கு வரும் வாக்குச்சாவடி அலுவலர்களிடம் தங்களது விருப்பம் தெரிவிக்கும் பட்சத்தில் அவர்களுக்கு படிவம் 12-டி வழங்கப்படும்.

மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் படிவம் 12-டியை பூர்த்தி செய்து அத்துடன் மாற்றுத்திறனாளிக்கான சான்றுடனும், கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நபர்கள் தகுதியான அரசு மருத்துவ அலுவலரிடமிருந்து பெறப்பட்ட மருத்துவ சான்றுடன்  தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் அளிக்கும் பட்சத்தில் அவர்களுக்கு தபால் வாக்கு வழங்கப்படும்.தபால் வாக்கு வழங்க விருப்பம் தெரிவித்த வாக்காளர்களது பெயர் வாக்காளர் பட்டியலில் தபால் வாக்கு பெற்றவர் என்று முத்திரையிடப்படும் என்பதால் ஒரு முறை விருப்பம் தெரிவித்தப்பின் அதனை மாற்ற இயலாது. வாக்குச்சாவடிக்கு நேரில் சென்று வாக்களிக்கவும் இயலாது. பூர்த்தி செய்யப்பட்ட படிவம் 12-டி படிவத்தினை வரும் 15ம் தேதிக்குள் வாக்குச்சாவடி அலுவலர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.  இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Related Stories: