தஞ்சாவூர், ஜூன் 11: உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. தமிழர்களின் கட்டிடக்கலைக்கும் சிற்பக்கலைக்கும் எடுத்துக்காட்டாய் விளங்கி வருகிறது. இக்கோவில் உலக பாரம்பரிய சின்னமாக உள்ளது. இந்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவிலை ட்ரோன் மூலம் படம் பிடிக்க மற்றும் கோவிலில் ரீல்ஸ் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சந்தோஷ் என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெரிய கோவிலை ட்ரோன் மூலம் பல்வேறு கோணங்களில் படம் பிடித்து தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த காட்சிகள் தற்போது சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. அனுமதி இல்லாமல் பெரிய கோவிலை படம் பிடித்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட இளைஞர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
