போக்குவரத்து விதிகளை மீறியதாக 6,284 பேர் மீது வழக்கு

ஈரோடு, மார்ச் 7:  ஈரோடு மாநகரில் கடந்த மாதம் போக்குவரத்து விதிகளை மீறியதாக 6,284பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர்களிடம் ரூ.73,100 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.  ஈரோடு மாநகரில் வாகன போக்குவரத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில், சில வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை கடைபிடிக்காமல் இருப்பதால், அவ்வப்போது வாகன நெரிசலும், விபத்துக்களும் நடக்கிறது. இந்நிலையில், ஈரோடு தெற்கு போக்குவரத்து போலீசார் சார்பில், கடந்த மாதம் அரசு மருத்துவமனை ரவுண்டானா, பன்னீர் செல்வம் பார்க் சந்திப்பு, காளைமாட்டு சிலை, கொல்லம்பாளையம் உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகளில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

இதில், ஹெல்மெட் அணியாமல், வாகனம் ஓட்டியதாக 2,980 வழக்கு, சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டியதாக 718 வழக்கு, செல்போன் பேசியபடி வாகனங்கள் இயக்கியதாக 519 வழக்கு, இரு சக்கர வாகனத்தில் மூவர் பயணித்ததாக 169 வழக்கு, சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றி சென்றதாக 168 வழக்கு, அதிவேகமாக வாகனங்களை ஓட்டியதாக 26 வழக்கு, விபத்து ஏற்படுத்தும் வகையில் தாறுமாறாக வாகனங்களை ஓட்டியதாக 7 வழக்கு மற்றும் இதர வழக்குகள் என மொத்தம் 6,284 வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர்களிடம் அபராதமாக ரூ.73,100 வசூலிக்கப்பட்டுள்ளது, என தெற்கு போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.

Related Stories:

>