அ.தி.மு.க.வுக்கு எதிரான நிலைப்பாடு?

ஈரோடு, மார்ச் 7:  விவசாயிகளுக்கு  எதிராக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதால், தேர்தலில்  அ.தி.மு.க.வுக்கு எதிரான நிலைப்பாடு எடுக்க சிறு, குறு விவசாயிகள் ஆலோசித்து  வருகின்றனர். தமிழ்நாடு சிறு மற்றும் குறு விவசாயிகள் சங்கத்தின் மாநில  தலைவர் சுதந்திரராசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழகத்தில் வருகிற சட்டமன்ற தேர்தலில் எங்களின் கோரிக்கையை ஏற்கும்  கட்சிகளுக்கு மட்டும் ஆதரவளிக்கப்படும். இதில், குறிப்பாக அனைத்து விவசாய  விளைபொருட்களுக்கும், ஆதார விலை அறிவிக்க வேண்டும். பால் லிட்டர் ரூ.100  கொள்முதல் விலை அறிவிக்க வேண்டும். விவசாயிகளுக்கு மானிய விலையில் டீசல்  வழங்க வேண்டும். சொட்டு நீர் பாசனம் அமைக்க அரசு மானியத்தை ரூ.15 ஆயிரமாக  உயர்த்தி வழங்க வேண்டும்.

எரிவாயு குழாய் பதிப்பை விவசாய நிலங்களில் அமைக்கக்கூடாது. ஏற்கனவே அமைத்த உயர்மின் கோபுர பாதிப்பு விவசாயிகளுக்கு  நிலுவையில் உள்ள தொகையை உடனடியாக வழங்க வேண்டும். கூட்டுறவு மற்றும்  தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடன் மற்றும்  கால்நடை கடன் மற்றும் பண்ணை சாராக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்.  விவசாயிகள் மற்றும் கூலி தொழிலாளர்கள் வாங்கிய நகைக்கடன்களை தள்ளுபடி செய்ய  வேண்டும். 8 வழிச்சாலை திட்டத்தை கைவிட்டு மாற்று வழியில் செயல்படுத்த  வேண்டும்.

மேலும் கீழ்பவானி கால்வாயில் கான்கிரீட் தளம் அமைக்கும் திட்டத்தை கைவிட  வேண்டும். மஞ்சள் மற்றும் மரவள்ளி கிழங்கு வாரியத்தை ஈரோடு மற்றும்  ராசிபுரம் பகுதியில் அமைக்க வேண்டும். இலவச மின்சாரம் தொடர உத்திரவாதம்  அளிக்க வேண்டும். இக்கோரிக்கைகளை ஏற்கும் கட்சிகளுக்கு ஆதரவு அளிக்க முடிவு  செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Related Stories: