×

திருவண்ணாமலை கிரிவலம் வருவதன் தத்துவார்த்தம் என்ன?

?திருவண்ணாமலை கிரிவலம் வருவதன் தத்துவார்த்தம் என்ன?
– எஸ்.கதிரேசன், திருப்பூர்.
அருணாசலம் காந்தம் போல கவர்ந்து இழுக்கிறது. காந்தத்தின் தன்மை என்ன? இரும்பை இழுத்துக் கொள்வது. பரமாத்ம சொரூபத்தின் தன்மை என்ன? ஜீவர்களை தன்னிடத்தே மீண்டும் சேர்த்துக் கொள்வதோடு மட்டுமல்லாது தானாகவே அவர்களை மாற்றிக் கொள்ளுதலும் ஆகும். ஒன்றும் கவலைப்படாதீர்கள். மெல்ல மெல்ல நீங்கள் காந்தமான இந்த மலையை வலம் வந்தபடி இருங்கள். இரும்பை மூடியிருக்கும் துருக்கள் சிலசமயம் காந்தத்தின் கவர்தலை இடைநின்று தடுத்தலைப்போல, உலக ஆசைகள் நம்மை மூடியிருக்கின்றன. இரும்பின் துருக்களை தேய்த்துத் தேய்த்து அழிக்கும்போது அதிவேகமாகவோ காந்தத்தின் இழுப்புச் சக்தியில் இரும்பு சிக்கிக் கொள்ளும். ஏனெனில், அடிப்படையில் நாம் நம்மை உடம்பாக நினைத்துக் கொள்கிறோம். ஆத்ம சொரூபமே நாமாக இருந்து கொண்டு, நாம் ஆத்மாவைக் காட்டிலும் அன்னியமாகவும், உடம்பாகவும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். எத்தனை சொன்னாலும் நீங்கள் உங்களை உடம்பாகத்தான் நினைக்கப் போகிறீர்கள்.
ஆனால், ஞானிக்குத்தான் தெரியும் நீங்களும், பரமாத்ம வஸ்துவும் வெவ்வேறல்ல என்பதும். இரும்புத் துகள் எப்படி காந்தத்தின் மீது ஒருமுகமாகத் திரும்பிற்றோ, அதுபோலவே மனம் வெளியே உலகத்தின்கண் இன்னதென்று கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு திரும்பியிருக்கின்றது. இது மெல்ல குரு என்கிற அருணாசல மலையால் தேய்க்கப்படும்போது சிதறிய இரும்புகள் ஒருமுகமாக காந்தம் நோக்கி திரும்பியதுபோல மனதின் பல்வேறு விருத்திகள் சட்டென்று நம்முடைய சொரூபமான ஆத்மாவை நோக்கி உன்முகப்படுகின்றது. இரும்பின் தற்காலிக சொரூபம் மறைந்து காந்தம் என்கிற நிரந்தர சொரூபமானதுபோல, ஜீவனின் தற்காலிகமான தேகம், மனம், உலக ஆசைகள், உலகை நோக்கி இழுக்கும் விருத்திகள் அனைத்தும் அழிந்து அது என்கிற அருணாசலமாகவே நாமும் இருக்கும் நிலை சித்திக்கும்’’.
‘‘நான் என்கிற இந்த உடம்பும், மனதும் என்ன ஆகின்றன’’ என்று கேட்கலாம்.
‘‘அருணாசலை மலை சிவமே என்பதில் ஐயமில்லை அல்லவா. காந்தத்தின் அனைத்து துகள்களும், மூலக்கூறுகளும், அணுக்களும் காந்தத்தை நோக்கி இருக்கும் சமயமே முக்கியமாகும். நம்முடைய புலன்களின் அனைத்து இயக்கமும் அருணாசலத்தை நோக்கியதாகவே மாற்றிக் கொள்ள வேண்டும். உங்களுக்கு நீங்கள் தனியானவர் என்றும் மற்றவை அனைத்தும் உங்களிலிருந்து அன்னியமாக உங்களை உடம்பாக அபிமானித்துக் கொண்டு தனித்தே காண்கிறீர்கள். இந்தப் பேத உணர்வானது அறுபட்டுப் போய் அபேதமான அத்வைதமான நிலை சித்திக்க வேண்டும். ஏனெனில், அதுவே நம்முடைய சொரூபமாகும். கடலோடு சேர வந்து நதியானது எங்கேயோ பிரிந்து சிறு குட்டைக்குள் வந்து சுருண்டு கொண்டு நான் இந்த குளம் என்று நினைப்பதை போன்றது இது. கடலோடு சேர்ந்துவிட்டால் கடலும் நதியும் வெவ்வேறல்ல. கடலை விடுத்து அதன் அலைகள் வெவ்வேறல்ல. அதுபோல அத்மாவான அருணாசலமாக நீங்கள் ஆவீர்கள். அதுவாகவே அதுவே உங்களை மாற்றும்.’’
நம்மை நாம் தனி வியக்தியாக (உடம்பாக) உணரும் வரை அருணாசலனை உணருவது அபாரமான விஷயமாகத்தான் தெரியும். ஏனெனில், வெளி விஷயங்களான உலகிலேயே ஊறிப்போய் கிடக்கும் நமக்கு எப்படி இதிலிருந்து வெளியே வருவதென்பது எப்படி புரியும். உலகத்தின் சிறிய முதல் பெரிய கவர்ச்சிக்கு ஆட்பட்டிருக்கும் இந்த தனி வியக்திற்கு தன்னைத் தானே வீழ்த்திக்கொள்ள முடியுமா? அல்லது இந்த அகங்காரத்தை நாம் இழக்கத்தான் சம்மதிப்போமா? இந்த இடத்தில்தான் அருணாசலத்தின் அருள் வலை நம்மிடத்தே செயல்படுகிறது. நமது அகங்காரத்தாலும், அற்ப புத்தியாலும் நம்மால் வெளிவிஷயங்களைவிட்டு மீண்டு வரமுடியுமா என்று நமக்குள் வினாவை எழுப்பிக் கொள்ள வேண்டும். ஏனெனில், இந்த அகங்காரத்திற்கு சுயமான அறிவொளியோ சக்தியோ அற்ற போலி விஷயமாகும். இதை ஈர்ப்பதற்கு உரிய சக்தி சர்வ சுதந்திரனான இந்த அருணாசலத்திற்கு மட்டுமே உண்டு.
இப்படி இந்த அருணாசலத்தின் இழுப்பு சக்தி இந்த மலையை வலம் வர வலம் வர நம்மிடையே செயல்படத் தொடங்குகிறது. அப்போது அசாதாரணமான முறையில் அந்த அருட்சக்தியின் திறத்தால் வெளி விஷயங்கள் மற்றும் அன்னியத்தை நாடும் விருப்பம் ஓயத் தொடங்குகிறது. சரியாகப் பார்த்தால் ஆன்மா, கடவுள், சிவம் என்று எப்பெயரிட்டாலும் சரிதான் அதனை நாடுகின்ற, அதை அடைய விரும்புகின்ற பேரன்பு பொங்கத் தொடங்குகிறது. இந்த அருணாசல குரு செய்யும் செயலைத்தான் ஞானிகள் அருட் பார்வை என்கிறார்கள். அருணாசல மலை பெரிய இருப்பு என்று கொள்வோமானால், அந்த மலையின் இழுப்பு, ஈர்த்தல், கவர்தல் என்கிற காந்தச் சக்திக்கே பக்தி என்று பெயர். அந்த இழுப்புச் சக்தியை நமக்குள் ஏற்படும் அன்பாகவும், பக்தியாகவும், இறைவன் மீது நாம் கொள்ளும் காதலாகவும் நம் முயற்சிகளையெல்லாம் மீறி உணர்கிறோம். அருணாசலம் சுத்த ஞானம். அந்த அருணாசல ஞானத்தின் இழுப்பையே நாம் பக்தியாக உணர்கிறோம். ஒரு ஜீவனுக்குள் அருணாசலத்தின் பக்தியை உருவாக்குவதே அந்த இருப்பு வடிவான அருணாசல ஞானமயமான கிரியே ஆகும்.’’

?ஜீவசமாதி என்றால் என்ன?
– தீபா குமாரி, வேலூர்.
ஜீவ சமாதி என்கிற வார்த்தைப் பிரயோகமே ஞானிகள், சித்தர்கள், ஜீவன் முக்தர்கள் போன்றோரின் திவ்ய சரீரத்தை (உடலை) அடக்கம் செய்த இடத்தை குறிப்பதாகும். இதையே அந்தந்த ஞானியரால் பின்பற்றப்பட்ட சம்பிரதாயத்தைக் கொண்டு துளசி பீடத்திற்கு கீழே சமாதி வைக்கப்பட்டால் அதை அதிஷ்டானம் என்றும், வைணவ ஞானியர் சமாதி இடத்தை திருவரசு என்றும், பொதுவாகவே லிங்கம் அமைக்கப்பட்டால் ஜீவசமாதி என்றும் அழைப்பர். ஜீவ சமாதி எனும் வார்த்தையை நுட்பமாகப் பார்த்தால் ஜீவன் என்று நினைத்துக் கொண்டிருக்கும் ஒருவர் தான் தனி வியக்தியான ஜீவனல்ல பிரம்மமே என்று அகண்டத்தில் சென்று கலப்பதே சமாதியாகும். நான் அழிந்து அதாவது நான் இந்த உடம்பு என்கிற அபிமான வடிவிலான அகங்காரம் அழிந்து, அதாவது சிறியதான ஜீவன் என்கிற வரையறைக்குட்பட்ட ஜீவத்துவம் அழிந்து எங்கும் விளங்கும் ஆத்மாவே நான் என்று அதில் சென்று நிலைத்து, அதுவாகவே இருப்பதே சமாதி ஆகும். இந்நிலையை அடைந்தவர்களையே ஜீவன் முக்தர்கள் என்கிறார்கள். அந்த அனுபூதி நிலையையே அத்வைதானுபவம், வீடுபேறு, மோட்சம், தன்னிலை நிற்றல், வாசனாக்ஷயம், ஆத்மானுபவம் என்று பல பெயர்களைக் கொண்டு அழைக்கிறார்கள்.
இப்பேற்பட்ட ஞானிகள் உலகத்திலுள்ளோரின் பொருட்டுதான் ஆத்மாதான் எனும் திடமான நிலையிலும், நம் பொருட்டு சரீரத்தை தாங்கிக்கொண்டு நமக்கு முக்திக்கான பாதையை காட்டுவார்கள். ஒரு நதிக்கு பல்வேறு துறைகள்போல அப்படித்தான் பல ஞானியர்கள் சரீரத்தோடு நம்மிடையே வாழ்ந்து பல மார்க்கங்களை காட்டுகின்றனர். அப்படிப்பட்ட ஞானிகளின் சரீரமும் ஞானமயம்தான். எனவே, ஞானி வேறு, ஞானம் வேறு, அவன் சரீரம் வேறு என்கிற பேதமெல்லாம் அங்கு இல்லை. அவர்கள் தங்கள் சரீரத்தை உதிர்த்து விட்டாலும் அவர்களின் பேரதிர்வுகள் கொண்ட இருப்பு அங்கிருந்தே இன்னும் பலமாக வேலை செய்யத் தொடங்கும்.
வேதங்கள் ஞானிகள் அடைந்த ஞானத்தை கைவல்யம் என்று கூறுகின்றன. அதேசமயம் அந்த ஞானியானவர் தன்னுடைய சரீரத்தையும் உதிர்க்கும்போது அதை விதேக கைவல்யம் என்று இன்னும் உயர்த்துகின்றன. தேகம் என்றால் உடம்பு. விதேகம் என்றால் உடம்பற்ற என்று பொருள். இப்போது அந்த ஞானி விதேக நிலையில் நிற்கும் ஞானியானார் என்று கூறுகின்றார். எனவேதான், அந்த திவ்ய சரீரத்தை சமாதியாக்கி வழிபடுகின்றனர்.
ஜீவசமாதிகளும் ஞானியரின் சந்நதி போலத்தான். அதனாலேயே திருமூலர் ஒரு ஞானி தன் சரீரத்தை விட்டால் எப்படி அவரை சமாதி வைக்க வேண்டும் என்று விதிமுறைகளை குறிப்பிடுகிறார். பகவான் ரமணர் கூட சேஷாத்ரி சுவாமிகளின் சரீரத்தை சமாதி வைக்கும்போது அந்த விதிமுறைகளை பார்த்துக் கொண்டதாக குறிப்பிடுகிறார்கள்.

Tags : Krivalam ,Tiruvannamalai ,S. KATHIRESAN, ,THIRUPPUR ,ARUNASALAM ,Godhead ,
× RELATED இறைத்துதி செய் மனமே!