×

சர்வதேச திரைப்பட விழாவில் முதன்முறையாக ‘பாப்’ பாடகியுடன் ஸ்டைலாக போஸ் கொடுத்த கனடா மாஜி பிரதமர்: ஓராண்டு காதல் ஜோடியை வாழ்த்திய ஹாலிவுட்

 

நியூயார்க்: நியூயார்க்கில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் பிரபல பாப் பாடகி கேட்டி பெர்ரி தனது காதலருடன் முதன்முறையாக பொதுவெளியில் தோன்றினார். கடந்த 2025ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் பிரபல பாப் பாடகி கேட்டி பெர்ரி (41) மற்றும் கனடாவின் முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (54) ஆகியோருக்கு இடையே காதல் மலர்ந்தது. தொடர்ந்து மாண்ட்ரியலில் நடந்த இசை நிகழ்ச்சியில் தனது மகளுடன் பங்கேற்ற ஜஸ்டின், அதன் பிறகு கேட்டி பெர்ரியுடன் இரவு விருந்தில் பங்கேற்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின.

அதனைத் தொடர்ந்து, பாரிசில் நடந்த கேட்டி பெர்ரியின் 41வது பிறந்தநாள் விழாவில் இருவரும் ஜோடியாக பங்கேற்று தங்களது காதலை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தினர். சுமார் ஒரு ஆண்டாக இவர்களது காதல் பயணம் தொடர்ந்து வரும் நிலையில், நியூயார்க்கில் உள்ள ஓ.கே.எக்ஸ் தியேட்டரில் நடந்த ட்ரைபெகா திரைப்பட விழாவில், கேட்டி பெர்ரியின் இசைப்பயணம் குறித்த ஆவணப்படம் திரையிடப்பட்டது. இந்த விழாவிற்கு ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் கேட்டி பெர்ரி இருவரும் முதன்முறையாக ஜோடியாக சிவப்பு கம்பள வரவேற்பில் கலந்து கொண்டனர்.

இவர்களைப் பார்த்த ரசிகர்கள் ‘2026ம் ஆண்டின் சக்திவாய்ந்த ஜோடி’ என்று உற்சாகமாக முழக்கமிட்டனர். இது குறித்து பேசிய நெருக்கமான வட்டாரங்கள், ‘கடந்த சில மாதங்களாக இவர்களது உறவு மிகவும் வலுவடைந்துள்ளது, விரைவில் தங்களது குடும்பத்தினரை சந்திக்க திட்டமிட்டுள்ளனர்’ என்று தெரிவித்தனர். ஓராண்டு நிறைவை எட்டும் நிலையில் இந்த ஜோடியின் பொதுவெளி வருகை ஹாலிவுட் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.

Tags : International Film Festival ,Hollywood ,New York ,Katy Perry ,
× RELATED அப்பாச்சி ஹெலிகாப்டரை சுட்டு...