தேர்தல் விதிமுறைகளால் ‘குருவிகள்’ பணத்தை கொடுக்க முடியாமல் தவிப்பு

சிவகங்கை, மார்ச் 7: சட்டமன்ற தேர்தலையொட்டி வாகன பரிசோதனை தீவிரமாக நடப்பதால் வெளிநாட்டில் இருப்பவர்களின் பணத்தை வழங்கும் குருவிகள் உரியவர்களிடம் வழங்க முடியாமல் தவித்து வருகின்றனர். சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, மதுரை மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் தொழிலாளர்களாக மலேசியா, சிங்கப்பூர் மற்றும் அரபு நாடுகளில் வசித்து வருகின்றனர். வெளிநாட்டில் இருப்பவர்களின் பணத்தை இங்குள்ள அவர்களின் உறவினர்களிடம் அளித்து வருபவர்களே குருவிகள் அல்லது உண்டியல் பணம் அளிப்பவர்கள் எனப்படுகின்றனர்.

இவ்வாறு 100க்கும் மேற்பட்டோர் குருவிகளாக செயல்பட்டு வருகின்றனர். வெளிநாட்டில் உள்ள ஏஜென்ட்களிடம் பணம் வழங்கப்பட்ட சில நாட்களில் இங்கு அவர்கள் வழங்க சொன்ன நபரிடம் பணம் வழங்கப்படும். வெளிநாட்டில் பணம் அளித்ததற்கோ அல்லது இங்கு பணம் பெற்று கொண்டதற்கோ எந்த ஆதாரமும் இருக்காது. சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நம்பிக்கை அடிப்படையில் மட்டுமே இத்தொழில் நடந்து வருகிறது. வங்கி, போஸ்ட் ஆபீஸ், தனியார் நிறுவனங்கள் மூலம் பணப்பரிமாற்றம் செய்ய முடியும் என்றாலும் இவை அனைத்தும் நகர்ப்புறங்களில் மட்டுமே உள்ளது. மேலும் கிராமங்களில் பெண்கள், முதியோர்கள் மட்டுமே உள்ளதால் அவர்கள் சென்று பணம் எடுத்து வருவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளது. இதனால் குருவிகள் மூலம் மட்டுமே மாதந்தோறும் கோடிக்கணக்கான ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.

 ஒரு நாளில் ஒரு குறிப்பிட்ட பகுதியிள் உள்ள ஏராளமான ஊர்களுக்கு சென்று பணம் வழங்கப்படுவது வழக்கம். இவர்கள் கொண்டு செல்லும் பணத்திற்கு எந்த ஆவணமும் இருக்காது. இந்நிலையில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியானதையடுத்து நன்னடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இதனால் தேர்தல் பறக்கும் படை அமைக்கப்பட்டு, வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்படும் பணம் பறிமுதல் செய்து வருகின்றனர். இதனால் குருவி தொழிலில் ஈடுபட்டுள்ளோர் பணத்தை உரியவர்களிடம் வழங்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

Related Stories: