திருப்புத்தூர் அருகே ஆவணமின்றி வந்த 25 ஆயிரம் கிலோ நெல் மூட்டை பறிமுதல்

திருப்புத்தூர், மார்ச் 7: திருப்புத்தூர் அருகே ஆவணமின்றி கொண்டு வந்த 25 ஆயிரம் கிலோ நெல் மூட்டைகளை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். திருப்புத்தூர் அருகே கீழ்ச்சிவல்பட்டி பகுதியில் நேற்று முன்தினம் இரவு தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு பகுதியை சேர்ந்த ராஜா என்பவர் லாரியில் சிவகங்கையில் இருந்து தஞ்சாவூர் நோக்கி நெல் மூட்டைகளை ஏற்றி வந்தார். பறக்கும் படையினர் லாரியை நிறுத்தி சோதனை செய்ததில் உரிய ஆவணங்கள் இன்றி 25 ஆயிரத்து 130 கிலோ எடை கொண்ட நெல் மூட்டைகள் இருப்பது தெரிந்தது. இதையடுத்து தாசில்தார் மகாதேவன் தலைமையிலான பறக்கும் படையினர் லாரியுடன் நெல்மூட்டைகளை பறிமுதல் செய்து கீழச்சிவல்பட்டி காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். இதேபோல் திருப்புத்தூர் அருகே ரணசிங்கபுரம் பகுதியில் சோதனையில் ஈடுபட்ட போது உரிய ஆவணங்கள் இன்றி சரக்கு வாகனத்தில் கொண்டு வந்த 363 அலுமினிய பாத்திரங்கள் மற்றும் 600 கையுறைகள் இருப்பது தெரிந்தது. பறக்கும் படையினர் இவற்றையும் பறிமுதல் செய்து தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

Related Stories: