செல்போனில் அடிக்கடி பேச்சு சகோதரியை கொன்ற தம்பி

நெல்லை: நெல்லை மாவட்டம் சுத்தமல்லி மேலகிராமம் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம்- கண்ணம்மாள். இவர்களது மகள் ராமலட்சுமி (23) கங்கைகொண்டான் சிப்காட் பகுதியில் உள்ள சேலார் நிறுவனத்திலும் மகன் முத்துகிருஷ்ணன் (21) ஓட்டலில் கேஷியராகவும் வேலை பார்த்துள்ளனர். ராமலட்சுமி, அடிக்கடி செல்போனில் யாருடனோ பேசிக் கொண்டு இருந்ததாக தெரிகிறது. இதனை விடுமுறையில் ஊருக்கு வரும் போது தம்பி முத்துகிருஷ்ணன் கண்டித்துள்ளார்.

ஆனால் அவர், தொடர்ந்து செல்போனில் பேசி வந்துள்ளார். இந்நிலையில் சுத்தமல்லி பகுதியில் நடைபெறும் கோயில் திருவிழாவுக்காக சில தினங்களுக்கு முன் விடுமுறையில் முத்துகிருஷ்ணன் வீட்டிற்கு வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு ராமலட்சுமியின் பெற்றோர் வீட்டின் பின்புறம் மாடுகளுக்கு தண்ணீர் வைக்க சென்றனர்.

அப்போது ராமலட்சுமி செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். இதனை முத்துகிருஷ்ணன் கண்டித்தார். இருவருக்கும் வாக்குவாதம் முற்றி ஆத்திரமடைந்த முத்துகிருஷ்ணன், அரிவாளை எடுத்து ராமலட்சுமியை சரமாரியாக வெட்டினார். இதில் அவர் உயிரிழந்தார். புகாரின்படி சுத்தமல்லி போலீசார் வழக்குபதிந்து முத்துகிருஷ்ணனை கைது செய்தனர்.

Related Stories: