* லீமா ரோஸ் சகோதரர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார்
சென்னை: போதை பொருள் வழக்கில் சிக்கியுள்ள ஜான் பிரிட்டோ வேறு… லாட்டரி மூலம் மணி லாண்டரி வழக்கில் சிக்கிய நான் வேறு… பெயர் ஒன்றுமையை வைத்து உண்மைக்கு மாறாக எனது பெயரை கெடுக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் லால்குடி அதிமுக எம்எல்ஏ லீமா ரோஸ் மார்ட்டின் சகோதரர் புகார் அளித்துள்ளார்.
சென்னை வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று லால்குடி அதிமுக எம்எல்ஏ லீமா ரோஸ் மார்ட்டின் சகோதரர் ஜான் பிரிட்டோ அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது: நான் கோவை திருவள்ளுவர் நகர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறேன். நான் பிளாஸ்டிக் மறு சுழற்சி வியாபாரம் செய்து வருகிறேன். தற்போது சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள அலுவலகத்தில் தங்கியுள்ளேன். எனது சகோதரி லீமா ரோஸ் மார்ட்டின் திருச்சி மாவட்டம் லால்குடி தொகுதி எம்எல்ஏவாக உள்ளார்.
அவரது கணவர் மார்ட்டின் சொந்தமாக நிறுவனங்கள் நடத்தி வருகிறார். மேலும், அரசு அனுமதி பெற்றுள்ள மாநிலங்களில் மட்டும், சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு லாட்டரி தொழில் மற்றும் ரியல் எஸ்டேட் சார்ந்த தொழில்களிலும் அவர்களது நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. எனது சகோதரி லீமா ரோஸ் மார்ட்டின் மீதும், அவரது குடும்பத்தினர் மீதும் வேண்டுமென்று உள்நோக்கத்தோடு உண்மைக்கு புறம்பாக பல்வேறு அவதூறான குற்றச்சாட்டுகள் திட்டமிட்டு சுய ஆதாயம் அடைவதற்காக யூடியூப் என்ற சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து பரப்பப்பட்டு வருகிறது.
கடந்த 7ம் தேதி மாரிதாஸ் என்பவர் யூடியூப் சேனல் மற்றும் தொலைக்காட்சிகள், கட்சியின் ஐடி விங்க் வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்ட காணொலியை நான் பார்த்தேன். அந்த காணொலியை 3.32 லட்சம் பேர் பார்க்கப்பட்டு, பல்லாயிரம் நபர்களால் பகிரப்பட்டும் இருந்தது. அந்த காணொலியில் சொல்லப்படும் தகவல்கள் அனைத்தும் முற்றிலும் பொய்யானவை கற்பனையானவை வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் பரப்பப்பட்டவை.
இந்த காணொலியில் கூறப்படும் ‘ஜான் பிரிட்டோ எனும் போதை பொருள் கடத்தலில் ஈடுபட்ட நபருக்கும் எனக்கும் எந்த ஒரு தொடர்பும் கிடையாது’. என்னிடம் மத்திய, மாநில அரசாணை சார்ந்த எந்த ஒரு புலனாய்வு நிறுவனமும் எந்த காலத்திலும் என்னிடம் போதை பொருள் கடத்தல் தொடர்பாக எந்த ஒரு விசாரணையும் செய்தது கிடையாது. நான் அவ்வாறான குற்ற செயல்களில் எந்த ஒரு சூழ்நிலையிலும் ஈடுபட்டதும் கிடையாது. இவ்வாறு இருக்கையில் உண்மைக்கு மாறாக பொய்யாக உள்நோக்கத்தோடு என் மீது வேண்டுமென்று பல தகவல்கள் இந்த காணொலியில் கூறப்பட்டுள்ளன.
எனக்கும் இந்த காணொலியில் கூறப்பட்டுள்ள ஜான் பிரிட்டோ என்ற நபருக்கும் பெயர் ஒன்றுமையை தவிர, வேறு எந்த ஒரு தொடர்பும் கிடையாது. என்னிடமோ, என்னுடைய வீட்டிலோ அல்லது என்னுடைய நிறுவனத்திலோ எந்த காலகட்டத்திலும் எந்த ஒரு மத்திய, மாநில அரசு புலனாய்வு நிறுவனத்திடம் இருந்து போதை பொருள் குறித்து புலனாய்வு எதுவும் செய்யப்படவில்லை.
இவ்வாறு இருக்கையில் என் தங்கை மீதும் என் தங்கையின் குடும்பத்தினர் மீதும் உள்ள காழ்ப்புணர்ச்சியின் காரணமாக அரசியல் உள்நோக்கத்தோடு என் மீதும், என்னுடைய உறவினர்கள் மீதும் நான் நடத்தி வருகின்ற நிறுவனத்திற்கு எதிராகவும் வேண்டுமென்று சட்டத்திற்கு புறம்பாக பொய்யாக தகவல்களை பதிவேற்றம் செய்துள்ள யூடியூப் சேனல் நிறுவனத்தினர் இதன் மூலமாக தங்களது காணொலியை பல பேர் பார்க்கும் வகையில் பதிவேற்றம் செய்துள்ளனர்.
மேலும், இதன் மூலம் தங்களுக்கு லாபம் கிடைக்கும் வகையில் பொய்யான தகவல்களுடன் இந்த காணொலியை பதிவேற்றம் செய்துள்ளனர். எனவே மேற்படி வீடியோவை பொதுமக்கள் பார்வைக்கு பகிர்ந்து அதன் மூலம் இல்லாத பொய்யான குற்றச்சாட்டுகளை எல்லாம் என் மீதும் என் குடும்பத்தார் மீதும் பரப்பி வருகிறார். மேற்படி ெசய்கையால் எனக்கும் மற்றும் என் குடும்பத்தார் நற்பெயருக்கும் மிகப்பெரிய களங்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் சமூகத்தில் எனக்கும், என்னுடைய சகோதரி எம்எல்ஏ லீமா ரோஸ் மற்றும் அவருடைய கணவர் மார்ட்டினுக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளது.
எனவே இவ்வாறு தங்களுடைய சுயலாபத்திற்காக சமூக அமைதியை குலைக்கும் வகையிலும், என் மீதும் என் உறவினர்கள் மீதும் மக்களுக்கு உள்ள மரியாதையையும் இழிவுபடுத்தும் வகையிலும் நடக்காத உண்மைக்கு மாறான காணொலியை உடனே நீக்க செய்தும், சட்டத்திற்கு புறம்பாக வேண்டுமென்றே காணொலியை பதிவேற்றம் செய்துள்ள யூடியூபர் மாரிதான் மற்றும் இதற்கு பின்னணியில் உள்ள நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.
* இரு வழக்கும் வேறுவேறு
தமிழகத்தில் போதைப் பொருள் வழக்கில் ஜான் பிரிட்டோ என்பவரை ஒன்றிய அரசின் புலனாய்வுப் பிரிவினர் தேடிவருகின்றனர். அதே பெயரில் உள்ள கோவையைச் சேர்ந்த ஜான் பிரிட்டோ மற்றும் அவரது சகோதரி லீமா ரோஸ், மருமகளும், அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் மனைவியுமான டெய்சி ஆகியோர் பண பரிமாற்ற வழக்கு கேரளாவில் 2018ம் ஆண்டு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
ஆனால் தமிழகத்தில் உள்ள போதைப் பொருள் மூலம் தொடரப்பட்ட பண பரிமாற்ற வழக்கின் குற்றவாளிகளும், கேரளாவில் பண பரிமாற்ற வழக்கில் தொடர்புடையவர்களும் ஒரே குற்றவாளிகள் என்று தகவல்கள் வெளியாகியது. கேரளா பண பரிமாற்ற வழக்கு லாட்டரி முறைகேடு என்பதற்கு பதில் போதைப் பொருள் கடத்தல் வழக்கு என்றும் தகவல்கள் வெளியாகியது. இதுகுறித்து உறுதிப்படுத்த லீமா ரோஸ், டெய்சி ஆகியோரை முயன்றபோது அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. தற்போது அவரது சகோதரர்தான் இரு வழக்குகளும் வேறு, வேறு.
கேரளாவில் உள்ள பண பரிமாற்ற வழக்கு, லாட்டரி முறைகேட்டுக்காக தொடரப்பட்டது. தமிழகத்தில் உள்ளது போதைப் பொருள் பணபரிமாற்ற வழக்கு. ஆனால் தமிழகத்தில் போதைப் பொருள் வழக்கிற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை. பெயர் ஒன்றாக இருப்பதால் என்னை தவறாக வெளியிடுகின்றனர் என்று கூறியுள்ளார். இதனால் தமிழகத்தில் உள்ள போதைப் பொருள் கடத்தலுக்கும், கோவை ஜான் பிரிட்டோவுக்கும் தொடர்பு இல்லை என்பதும், கேரளாவில் பதிவு செய்யப்பட்டது போதைப் பொருள் பண பரிமாற்ற வழக்கு இல்லை. அது தவறான தகவல் என்பதும் தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

