×

பெண்கள் பாதுகாப்புக்கு கலைஞர், ஜெயலலிதா, மு.க.ஸ்டாலின் கொண்டு வந்ததையே‘சிங்கப்பெண்’ என ஸ்டிக்கர் மட்டும் ஒட்டி புதிய திட்டம்போல் தொடங்கி வைத்த விஜய்

* பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவின் பெயர், சீருடை மாற்றப்பட்டதா?

சென்னை: பெண்கள் பாதுகாப்புக்கு முன்னாள் முதல்வர்கள் கலைஞர், ஜெயலலிதா, மு.க.ஸ்டாலின் ஆகியோர் கொண்டு வந்த திட்டத்தையை ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை’ என்று புதிய திட்டம் போன்று ‘ஸ்டிக்கர்’ மட்டும் ஒட்டி முதல்வர் விஜய் திட்டத்தை நேற்று தொடங்கி வைத்தார். தமிழ்நாடு காவல்துறையில் திமுக ஆட்சியில் கலைஞர் முதல்வராக இருந்த போது, இந்தியாவிலேயே முதன் முதலில் தமிழக காவல்துறையில் பெண்களை கடந்த 1973ம் ஆண்டு பணியில் சேர்க்கும் திட்டத்தை அறிமுகம் செய்தார்.

அதனை தொடர்ந்து மற்ற மாநிலங்களில் பெண்களை காவல்துறையில் சேர்த்தனர். தமிழக காவல்துறையில் பெண்களை பணிக்கு எடுத்து 50ம் ஆண்டுகள் நிறைவு விழா கடந்த 2023ம் ஆண்டு மு.க.ஸ்டாலின் ஆட்சியில் பொன் விழாவாக கொண்டாடப்பட்டது. அதன் நினைவாக மகப்பேறு விடுப்பு, சொந்த மாவட்டங்களில் பணி, வார விடுமுறை என பெண் காவலர்களுக்கு பல்வேறு சிறப்பு சலுகைகளும் அறிவிக்கப்பட்டது.

கலைஞர் முதல்வராக இருந்த போது, தமிழகத்தில் பெண்களை பாதுகாக்கும் வகையில் ‘plain clothes woman police’ என்ற பெயரில் சீருடையில்லா பெண் காவலர்கள் திட்டம் தொடங்கப்பட்டு, பெண்களுக்கு எதிராக நடந்த குற்றங்களை தடுக்கவும், முன்கூட்டியே பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுக்கப்பட்டு வந்தது. பின்னர் அதிமுக ஆட்சி காலத்தில் முதல்வராக ஜெயலலிதா இருந்த போது, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க தமிழ்நாடு காவல்துறையில் கடந்த 1992ம் ஆண்டு சென்னை மாநகர காவல் துறையில் உள்ள ஆயிரம் விளக்கு பகுதியில் முதல் ‘அனைத்து மகளிர் காவல் நிலையம்’ தொடங்கப்பட்டது.

அதன் பிறகு படிப்படியாக 202 அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் தொடங்கப்பட்டது. பின்னர் மு.க.ஸ்டாலின் முதல்வராக இருந்த போது, கடைசியாக கடந்த 2025ல் மாநிலம் முழுவதும் 244 அனைத்து மகளிர் காவல் நிலையங்களாக உயர்த்தப்பட்டது. குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக்காக மட்டும், அனைத்து மகளிர் காவல் நிலையம், பெண்களுக்கு என ஆட்கடத்தல் தடுப்பு பிரிவு, பெண்களுக்கு எதிரான குற்றங்களை புலன் விசாரணை செய்யும் பிரிவு, சிறப்பு இளஞ்சிறார்கள் காவல் பிரிவு, குழந்தைகள் நல காவல் அலுவலர்கள்,

குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு என பெண்கள் மற்றும் குழந்தைகளை பாதுகாப்பதற்கும், அவர்களுக்கு எதிரான குற்றங்களின் புலன் விசாரணை செய்ய தனித்தனி பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளது. இதுதவிர தமிழக காவல்தறையில் கடந்த 2019ம் ஆண்டு மார்ச் மாதம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு ஐஜி தலைமையில் ஒரு டிஐஜி, ஒரு எஸ்பி மற்றும் காவலர்கள் அடங்கிய பிரிவு தொடங்கப்பட்டது.

சென்னை பெருநகர காவல்துறையில் துணை கமிஷனர் ஒருவர் தலைமையிலும், மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி, சேலம் உள்ளிட்ட 6 மாநகர காவல்துறைகளில் தலா ஒரு கூடுதல் துணை கமிஷனர் தலைமையிலும், 24 மாவட்டங்களில் தலா ஒரு கூடுதல் எஸ்பி தலைமையில் மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு செயல்பாட்டில் உள்ளது. இதுதவிர 43 குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவுகள், 39 சிறப்பு இளஞ்சிறார் காவல் பிரிவுகள் இயங்கி வருகிறது.

முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கவும், பெண்களை பாதுகாக்க ‘காவலன் எஸ்ஓஎஸ்’ என்ற செயலி திட்டம், பாதுகாப்பான நகரம் திட்டம், பாலியல் குற்றங்களில் இருந்து பெண் குழந்தைகளை பாதுகாக்கும் வகையில் ‘இமைகள் திட்டம்’ ஆரம்பிக்கப்பட்டு வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. சமூக வலைத்தளமான பேஸ்புக், இன்ஸ்டா, எக்ஸ், வாட்ஸ் அப் உள்ளிட்ட இணையவழி மூலம் பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் தடுக்க அனைத்து காவல் மாவட்டங்களில் பெண்களுக்கு என இணையவழி குற்ற காவல் நிலையங்கள் தொடங்கப்பட்டுள்ளது.

பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவிகளுக்கு எதிராக இணையவழி குற்றங்கள் தடுக்கும் வகையில் ‘போலீஸ் அக்கா திட்டம்’ நடைமுறையில் உள்ளது. மேலும், பொது இடங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடக்காமல் இருக்க பெண் எஸ்ஐ தலைமையில் ரோந்து பணிகள் நடைமுறையில் உள்ளது.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான நடைபெறும் பாலியல் உள்ளிட்ட குற்றங்களை தடுக்க தமிழக காவல்துறையில் ஏற்கனவே முன்னாள் முதல்வர்கள் தொடங்கி வைத்த திட்டங்களையே, தமிழக முதல்வராக பொறுப்பேற்ற விஜய் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக்காக மாநிலம் முழுவதும் மாவட்டம் மற்றும் மாநகரங்கள் வாரியாக ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை’ திட்டத்தை நேற்று சென்னையில் தொடங்கி வைத்தார்.

ஏற்கனவே நடைமுறையில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவுக்கு ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை’ என்று புதிதாக பெயர் சூட்டி, அதற்கு என தனி லச்சினை அறிமுகம் செய்து பழைய திட்டத்தையே, புதிய திட்டம் போன்று தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு என ரூ.354 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அதி நவீன கருவிகளுடன் பிங்க் நிற ரோந்து வாகனத்தை சிங்கப்பெண் என்று புதிய ‘ஸ்டிக்கர்’ ஒட்டி புதிய ரோந்து வாகனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

புதிதாக தொடங்கப்பட்டுள்ள ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைக்கு’ என தனி சீருடைகளும் தமிழ்நாடு காவல்துறை சார்பில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி இந்த திட்டத்தில் பணியாற்றும் பெண் காவலர்களுக்கு ‘நீல நிற சட்டை, காக்கி நிற பேண்ட்’ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் கருப்பு நிற தொப்பியும், கருப்பு நிற ஷூவும் வழங்கப்பட்டுள்ளது.

ஐஜி பவானீஸ்வரி தலைமையில் ஒரு எஸ்பி, 2 டிஎஸ்பிக்கள், 4 இன்ஸ்பெக்டர்கள், 10 எஸ்ஐக்கள், 38 போலீசார் கொண்டு பெயரை மட்டும் மாற்றி ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை’ திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த புதிய அதிரடிப்படையின் செயல்பாடு போக போகத்தான் தெரியவரும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். இந்த திட்டம் தொடக்க விழாவில், தலைமைச் செயலாளர் சாய்குமார், உள்துறைச் செயலாளர் மணிவாசன், டிஜிபி மகேஷ்குமார் அகர்வால், தீயணைப்புத்துறை இயக்குநர் சீமா அகர்வால், சென்னை போலீஸ் கமிஷனர் அமல்ராஜ், சிங்கப்பெண் படை பிரிவு ஐஜி பவானீஸ்வரி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் முதல்வர் விஜய் பேசுகையில், பெண்களுக்கு நடக்கும் கொடுமைகளைக் கேட்கும்போது மனது பதறுகிறது. இந்தப் பிரச்சனைகளுக்குக் காரணம் போதைப்பொருள் நடமாட்டம். முதலில் போதைப்பொருள் நடமாட்டத்தை வேருடன் அகற்ற வேண்டும். இதையெல்லாம் எப்படிச் சரிசெய்யப் போகிறோம் என்பதுதான் முக்கியம். பெண்களுக்கான பாதுகாப்பு சட்டம் ஒழுங்கு சார்ந்தது மட்டுமல்ல, சமூக மற்றும் தனி மனித ஒழுங்கு சம்மந்தப்பட்டது.

பொது இடங்களில் பெண்கள் பயம் இல்லாமல் வாழ்வதற்கான சூழலை உருவாக்க வேண்டும். பெண்கள் பாதுகாப்பை தொந்தரவு செய்பவர்கள் யாராக இருந்தாலும் அதைச் சகித்துக்கொண்டு இருக்க முடியாது. இந்தத் திட்டத்திற்கு முதற்கட்டமாக ரூ.354 கோடி நிதி ஒதுக்கப்படும். 2500 பணியிடங்கள் உருவாக்கப்படும். நவீன வாகனங்கள், சாதனங்கள் வழங்கப்பாடும். பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க இந்தியாவில் முதல் முறையாக ட்ரோன் மூலம் கண்கானிக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Vijay ,Kalaignar ,Jayalalithaa ,M.K. Stalin ,Singappen ,Crimes Against Women and Children Unit ,Chennai ,Chief Ministers ,Singappen Special Task Force ,
× RELATED மகளுக்கு ஆடம்பரமாக திருமணம்...