சென்னை: முதல்வர் விஜய் 3 நாள் பயணமாக நாளை தனி விமானத்தில் டெல்லி புறப்பட்டு செல்கிறார். தமிழ்நாடு முதல்வர் விஜய், முதலமைச்சராக பொறுப்பேற்று கடந்த மே மாதம் 27ம் தேதி டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடி, ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்தார். இந்நிலையில், டெல்லியில் நாளை (11ம் தேதி) நிதி ஆயோக் கூட்டம், பிரதமர் மோடி தலைமையில் நடக்கிறது. அந்த கூட்டத்தில், இந்தியாவில் உள்ள அனைத்து மாநில முதலமைச்சர்களும் கலந்து கொள்கின்றனர்.
அதன்படி, தமிழ்நாடு முதல்வர் விஜய் பிரதமர் தலைமையில் நடக்கும் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக, 3 நாள் பயணமாக, நாளை காலை 8 மணியளவில் சென்னையில் இருந்து தனி விமானத்தில் டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார். தொடர்ந்து, ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, ஒன்றிய உள்துறை அமைச்சர், காங்கிரஸ் தலைவர்கள் ஆகியோரை இந்த முறை முதல்வர் விஜய் சந்தித்து பேச இருப்பதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாகவே, முதலமைச்சர் தனது பயணத்தை 3 நாட்கள் பயணமாக, அமைத்துள்ளதாகவும், டெல்லியில் மூன்று நாட்கள் பயணத்தை நிறைவு செய்துவிட்டு வரும் 12ம் தேதி தனி விமானத்தில் டெல்லியில் இருந்து புறப்பட்டு, மாலை 6 மணியளவில் சென்னைக்கு திரும்புகிறார் என்றும் சென்னை விமான நிலைய வட்டாரங்கள் தரப்பில் கூறப்படுகிறது.

