×

அமைச்சர் கீர்த்தனா அரசு முறை பயணமாக தென்கொரியா சென்றார்

சென்னை: தமிழகத்தின் புதிய தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா தலைமையிலான குழு கடந்த 8ம் தேதி (நேற்று முன்தினம்) தென்கொரியா நாட்டின் உல்சானில் உள்ள பிரமாண்ட கப்பல் கட்டுமான நிறுவனமான எச்.டி. ஹூண்டாய் ஹெவி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனனத்திற்கு சென்று, அங்குள்ள வசதிகள் மற்றும் உற்பத்தி அமைப்புகளை பார்வையிட்டு, கப்பல் உற்பத்தி செயல்முறைகள் மற்றும் உற்பத்தி மேலாண்மை அமைப்புகளை ஆய்வு செய்து பரஸ்பர ஒத்துழைப்பு வாய்ப்புகள் குறித்து விவாதித்துள்ளனர்.

எச்.டி. ஹூண்டாய் ஹெவி இன்டஸ்ட்ரீஸின் ஹோல்டிங் நிறுவனமான எச்.டி. ஹூண்டாய், கடந்த ஆண்டு டிசம்பரில் தமிழ்நாடு அரசுடன் (திமுக ஆட்சி) புதிய கப்பல் கட்டுமான தளம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டது. மேலும், இந்த ஆண்டு ஏப்ரலில் அந்த ஒத்துழைப்பை மத்திய அரசின் மட்டத்திற்கும் விரிவுபடுத்தியுள்ளது.

தமிழகத்தில் புதிய கப்பல் கட்டுமான தளத்தை அமைப்பதற்காக நிலம் ஒதுக்கல், துறைமுக மற்றும் பின்னணி அடிப்படை வசதிகள் உருவாக்கம், வரி சலுகைகள், நிதி உதவிகள் உள்ளிட்ட சிறப்பு ஊக்கத்தொகை திட்டங்களை தமிழ்நாடு அரசு தற்போது தயாரித்து வருவதாக அப்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஹூண்டாய் அதிகாரி ஒருவர் கூறுகையில், “அமைச்சர் கீர்த்தனா உல்சான் கப்பல் கட்டுமான தளத்தை பார்வையிட்டது, கப்பல் தொழிலை முக்கிய துறையாக மேம்படுத்த தமிழ்நாடு அரசின் உறுதியான விருப்பத்தை மீண்டும் நிரூபிக்கிறது.

இந்த திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுத்து செல்ல திட்டமிட்டுள்ளோம்” என்றார். மேலும் அரசுமுறை பயணமாக தென்கொரியா சென்றுள்ள அமைச்சர் கீர்த்தனா, ஹூண்டாய் நிறுவன உயர் அதிகாரிகளை சந்தித்து தமிழகத்தில் தொழில் தொடங்க அழைப்பு விடுத்தார். அப்போது, தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் அமைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரியில் ரூ.18 ஆயிரம் கோடி முதலீட்டில் தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் அமைக்க கடந்த திமுக ஆட்சியில் ஒப்பந்தம் போடப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டம் தூத்துக்குடியில் செயல்பாட்டிற்கு வரும்பட்சத்தில் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 55,000 பேருக்கு புதிதாக வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Minister ,Keerthana ,South Korea ,Chennai ,Tamil Nadu ,H.D. Hyundai Heavy Industries ,Ulsan, South Korea ,
× RELATED முதல்வர் தொகுதி பெரம்பூர் உள்பட...