×

பேரறிவாளன் வழக்கறிஞராக பதிவு செய்ததை எதிர்த்து வழக்கு சிபிஐ விசாரணை கோரிக்கை நிராகரிப்பு: பார்கவுன்சில் பதில்தர உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட பேரறிவாளன் வழக்கறிஞராக பதிவு செய்த முறை குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளன் 2022ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில் கடந்த ஏப்ரல் 24ம் தேதி அவர் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்துள்ளார். இந்த நிலையில், அவரை வழக்கறிஞராக பதிவுசெய்ததை சட்டவிரோதம் என்று அறிவிக்கக் கோரி காங்கிரஸ் எம்.பி. ஆர்.சுதா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், கருணை மனுவை பரிசீலிக்க தாமதமானதால் மட்டுமே பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டுள்ளாரே தவிர, குற்றவாளி என்ற தீர்ப்பு நீக்கப்படவில்லை.

வழக்கறிஞராக பேரறிவாளனை பதிவு செய்தது சட்டவிரோதமானது. மரண தண்டனை மற்றும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு விடுதலையான இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு வழக்கறிஞராக பதிவு செய்ய அனுமதிக்கும் வழக்கறிஞர் சட்டப் பிரிவை சட்டவிரோதமானது என்று அறிவிக்க வேண்டும். பேரறிவாளன் வழக்கறிஞராக பதிவு செய்த முறை குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி இருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், குற்ற வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து விடுதலை ஆன இரண்டாண்டுகளுக்கு பிறகு வழக்கறிஞராக பதிவுசெய்ய, வழக்கறிஞர்கள் சட்டம் அனுமதிக்கும்போது பேரறிவாளனின் பதிவில் என்ன முறைகேடு நடைபெற்றுள்ளது.

சிபிஐ விசாரணைக்கு எப்படி உத்தரவிட கோர முடியும் என்று கேள்வி எழுப்பி, எதிர்மனுதாரர் பட்டியலிலிருந்து சிபிஐயை நீக்குமாறு மனுதரார் தரப்புக்கு உத்தரவிட்டனர். மேலும், இந்த மனுவுக்கு பதிலளிக்குமாறு இந்திய மற்றும் தமிழ்நாடு பார் கவுன்சிலுக்கு நான்கு வார கால அவகாசம் வழங்கிய நீதிபதிகள் விசாரணையை தள்ளிவைத்தனர்.

Tags : CBI ,Bar Council ,Perarivalan ,Chennai ,Madras High Court ,Rajiv ,Gandhi ,
× RELATED முதல்வர் தொகுதி பெரம்பூர் உள்பட...